சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு பல்வேறு தரப்பினரால் இணைந்து பெற்ற ஜனநாயக வெற்றி தற்போது காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய நிலை குறித்து தான் மிகுந்த அக்கறையுடன் அவதானித்து வருவதாகவும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் காட்டிக் கொடுத்தமை குறித்து தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ஏனைய கட்சிகளும், சிவில் சமூகத்தினரும் தீவிர முயற்சியை மேற்கொண்டு ஒரு நேர்மையான இலங்கையை கட்டியெழுப்பினோம்.
ஆனாலும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் எங்கள் கொள்கைள், அடிப்படை உரிமைகள், ஜனநாயகம் மற்றும் ஜனநாயக வழிமுறைகளை காட்டி கொடுத்துவிட்டு ஊழலில் ஈடுபட்ட மோசடிக்காரர்களுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.
இது இலங்கை மக்களுக்கு நம்பிக்கையில்லாத தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாடு ஆபத்தான நிலையை நெருங்கியுள்ளது. சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. அனைத்து மக்களும் சமாதானத்துடன் ஒன்றினைந்து மீண்டும் முதிர்ச்சியான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தான் ஈடுபடவுள்ளதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து, விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இந்த தகவல்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரங்க வெளியிட்டுள்ளார்.