மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல் மேலும் வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
“இன்று மாலையிலிருந்து யாழ். குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு 11.30 மணியளவில் இலங்கைக்கு வட. கிழக்காக காங்கேசந்துறையிலிருந்து அண்ணளவாக 480 கி.மீ தூரத்தில் கஜா புயல் நிலைகொண்டது.
இது அடுத்த 6 மணித்தியாலங்களில் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்வதுடன் பலமான சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம் காணப்பட்டது.
இந்நிலையில், குறித்த புயல் தென் தமிழ்நாடு கரையைக் கடப்பதுடன் இலங்கையின் வடக்கு கரைக்கு நெருக்கமாகவும் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் தாக்கம் காரணமாக மன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கரையோரத்தின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் உட்புகக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வட மாகாணத்தில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
யாழ். குடாநாட்டில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதோடு மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.