நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அமளி காரணமாக சபாநாயகர் தனது கடமைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டதுடன் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், வரவு செலவு திட்டத்தையோ, இடைக்கால நிதி நிலை அறிக்கையையோ தாக்கல் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
தற்போதுள்ள நிதி நிலைமைக்கு அமைய பெரிய பாதிப்பு இல்லாம் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
வெளிநாட்டு கடனை செலுத்துவதில் பிரச்சினையில்லை. வெளிநாட்டு நாணய பிரிவை முகாமைத்துவம் செய்து கொள்ளும் நிலைமை காணப்படுகிறது.
வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்க முடியவில்லை என்றால் இடைக்கால நிதி நிலை அறிக்கை ஒன்றை நிறைவேற்றுவதே சிறந்த மாற்றுவழி என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தற்போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையால் இடைக்கால நிதி நிலை அறிக்கையை சமர்பித்து நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி உக்கிரமடையலாம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய வங்கியினால், சிறிது காலம் பொருளாதாரத்தை சமாளிக்க முடிந்தாலும் நீண்டகாலத்திற்கு சமாளிக்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை சமர்பிக்கவிருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.
இதனையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்றதுடன் மகிந்த ராஜபக்ச நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்தார்.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு நிதி முதலீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.