காதலர் தினம் வரப்போகிறது. அனைத்து காதலர்களும் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட நினைப்பார்கள். சிலருக்கு காதல் என்றாலே பிடிக்காது. காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே, சிலர் அதிக கோபம் கொள்வார்கள். அதேப் போல் திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலும் சிலர் தலைத்தெறித்து ஓடுவார்கள். இதற்கு காதல் மற்றும் திருமணத்தின் மீதான கெட்ட அபிப்ராயம் மட்டுமின்றி, அவர்களது ராசிகளும் தான் என ஜோதிடம் கூறுகிறது.
சில ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் திருமணம் பொருந்தாமல் இருப்பதற்கு, அந்த ராசிகளுக்கான அதிபதிகள் தான். எந்த ராசிக்காரர்கள் காதல், திருமணம் என்று கூறினால் தலைத்தெறித்து ஓடுவார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஜோதிடத்தின் படி, கீழே கொடுக்கப்ப்டடுள்ள ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்வில் ஈடுபட நாட்டமே இருக்காதாம். சரி, இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைப் பார்ப்போமா!
மேஷம்
மேஷ ராசியைக் கொண்டவர்கள், தங்களுக்கான விதிமுறைகளைக் கொண்டவர்கள் மற்றும் இப்படி தான் வாழ வேண்டுமென்ற ஒரு தராதரங்களைக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக இவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புபவர்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் சமரசமாக மாட்டார்கள் மற்றும் தங்கள் கருத்திற்கு மாற்றாக யார் என்ன சொன்னாலும் அதை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் திருமணம் போன்றவை பொருந்துவது கடினமானது. ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களது கருத்துக்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை யாரேனும் செய்தால், சற்றும் யோசிக்காமல் அவர்களை விலக்கி வைத்து விடுவார்களாம். இந்த காரணத்தினாலேயே இவர்கள் உறவுகளில் ஈடுபட விரும்புவதில்லை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நட்புமிக்கவர்களாக, நன்கு கலகலப்பாக பேசுபவர்கள் போன்று தான் தெரிவார்கள். ஆனால் இவர்கள் யாரையும் சார்ந்து வாழ விரும்பமாட்டார்கள். இவர்களுக்கு மற்றவர்களுடன் நேரத்தை செலவழிக்க ஆர்வம் இருக்கும். ஆனால் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையாக யாருடனும் இருக்க விரும்பமாட்டார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள். இவர்களது நேர்மையால் இவர்களுக்கு துணையாக வருபவர்கள் பல நேரங்களில் மன வருத்தத்திற்கு உட்படுவார்கள். இவர்களது உற்சாகமான ஆளுமை ஆச்சரியத்தை அளிப்பதாக இருக்கும். ஆனால் திருமணம் என்ற முக்கியமான விஷயம் குறித்து பேசும் போது, அதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் சுதந்திரமாக இருப்பதையே நேசிக்கிறார்கள். அதனால் இவர்களை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணம் நடப்பதே மிகவும் கடினம் எனலாம். ஏனெனில் இவர்கள் தங்களது சுதந்திரத்தை விரும்புகிறார்கள். இந்த சுதந்திரத்திற்கு இடையூறாக ஒரு உறவில் ஈடுபடுவதை இவர்கள் விரும்பமாட்டார்கள். மேலும் இவர்கள் உற்சாகமானவர்கள் மற்றும் எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பவர்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பர் மற்றும் இவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கைத்துணை அல்லது காதலன்/காதலியை விட, தங்களது நண்பர்களுடன் தான் நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு விரைவில் உறவில் ஈடுபடுகிறார்களோ, அவ்வளவு விரைவில் விலகியும் விடுவர். இதற்கு இவர்களது குணம் தான் காரணம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டமாட்டார்கள். இவர்கள் ஓர் உறவில் இருக்கும் போது, தங்களது உணர்வுகளை சரியாக வெளிக்காட்ட முடியாமல் கஷ்டப்படுவர். ஆரம்பத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆழமான உணர்வுகளை ஒருவரால் அறிய முடியும். ஆனால் காலம் போக போக, இந்த உணர்வுகள் மறைந்து, இந்த ராசிக்காரர்கள் உணர்வில்லாத ஒரு ஜடம் போல் அமைதியாகிவிடுவர்.
இந்த ராசிக்காரர்கள் தங்களது உணர்வுகளை எப்போதும் கட்டுப்பாட்டுடனேயே வெளிக்காட்டாமல் மனதிற்கு அடக்கி வைத்திருப்பார்கள்.
ஒரு உறவில் இருக்கும் போது இப்படி இருப்பது நல்லதல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டுகிறோமோ, அந்த உறவு அவ்வளவுக்கு அவ்வளவு வலுப்பெறும். இப்படி உணர்வுகளை வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளேயே வைத்திருந்தால், அது நாளடைவில் உறவில் விரிசல்களை உண்டாக்கிவிடும்.