ஸ்ரீலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களுக்குமிடையில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
உள்ளுார் நேரப்படி இன்று மாலை 7 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நவம்பர் 16 ஆம் திகதியான நேற்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான அனுமதியை கோரும் நோக்கிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் மஹிந்தவாதிகள் நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் கட்டவிழ்த்து விட்டிருந்த குழப்பங்கள் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியில் அவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக மஹிந்தவாதிகள் கூறிவருகின்றனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நவம்பர் 16 ஆம் திகதியான நேற்று இரவு தாமரை மொட்டு கட்சி என அழைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தகவலை தெரிவித்தாக அந்த அணியின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
அத்துடன் நாடாளுமன்ற அமர்வு முறையாக நடைபெற்று நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு அமைய நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படும் பட்சத்திலேயே அதனை ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தாகவும் லக்ஷ்ன் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி மீண்டும் ஒரு முறை ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க போவதில்லையென்ற அவரது உறுதியான நிலைப்பாட்டையும் பெதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி தெரிவித்திருந்தாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்றைய தினம் இரவு ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதியை நேரில் சந்தித்து மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அவரது நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருக்கின்றது.
இதற்கமைய ஜனாதிபதியை சந்திக்க அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கி கொடுத்த நிலையில் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவிருக்கின்றனர்.
அதேவேளை, நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிந்து கொண்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முடிவையும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவார்கள் என அந்த கட்சியினர் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் சந்திப்புக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, நாடாளுமன்றில் நேற்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அறிவித்திருக்கும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தானே நாட்டின் பிரதமர் என்று சூளுரைத்திருக்கின்றார்.
அதேவேளை, நம்பவம்பர் 17 ஆம் திகதியான இன்றைய தினம் சனிக்கிழமை கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் அலுவலகத்தில் மஹிந்த ராஜபக்ச ஆளும் கட்சியென கூறிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கூட்டம் ஒன்றையும் நடத்தியிருக்கின்றார்.