சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
மட்டன் பிரியாணி என்ற பெயரில் வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் இறந்த ஆடு, மாடுகளின் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்தன. இதற்காக அனுப்பப்பட்ட பல ஆயிரம் கிலோ அளவிலான பழுதடைந்த ஆட்டிறைச்சியை சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றி அவற்றை அழித்தனர்.
இந்நிலையிலேயே இன்றும் அவ்வாறு பழுதடைந்த ஆடு, மாட்டிறைச்சிகள் இறக்குமதி செய்யப்டுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவற்றினைக் கைப்பற்றுவதற்காக எழும்பூர் புகையிரத நிலையத்தில் பொலிசாரும் சுகாதாரத் துறையினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போதே கைப்பற்றப்பட்ட பெட்டிகளை அவர்கள் திறந்து சோதனையிட்டபோது அதற்குள் நாய் இறைச்சிகள் காணப்பட்டமை அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட இந்த நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்துள்ள சென்னை நகர போலீசார், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் மட்டன் பிரியாணி என்ற பெயரில் நாய்க்கறி பரிமாறப்பட்டது என்னும் விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இன்று பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.