கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் நவம்பர் 16 ஆம் திகதி மிதந்து வந்தது கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், காவிரி ஆற்றில் சடலமாக மிதந்து வந்த நபர், சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நாராயணப்பா என்பவரின் மகன் நந்தீஸ் (25) என்பதும், சடலமாகக் கிடந்த பெண், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகளும், நந்தீஸின் மனைவியுமான சுவாதி (20) என்பதும் தெரிய வந்தது.
சாதி மீறிய காதலால் உயிர்போன பரிதாபம்
நந்தீஸ் என்ற அந்த வாலிபர் மரக்கடையில் கூலி வேலை செய்து வரும் ஏழை தொழிலாளியின் மகன்.
இறந்து கிடந்த பெண் சுவாதியின், தந்தையும் பொருளாதார ரீதியாக செல்வாக்கு இல்லாதுபோனாலும், ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் குறு விவசாயி. இருவரும் வேறு வேறு சமூகத்தினர்.
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நந்தீஸ், ஹார்டுவேர் கடையில் கூலி வேலைக்குச் சென்று வந்தார். சுவாதி, தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். ஒரே பகுதி என்பதால் அவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பு, காதலாக மலர்ந்தது.
இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, குடும்பத்தாரை மீறி இவர்களது இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.
கொடூர கொலை
சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பாக்கள் அஸ்வதப்பா, வெங்கடேஷ், கார் ஓட்டுநர் சாமிநாதனர் ஆகிய மூன்று பேரும், நந்தீஸிடமும், சுவாதியிடமும், ‘நடந்தது நடந்து போச்சு. எங்களுக்கு உங்கள் மேல் இருந்த கோபம் எல்லாம் மறைந்துவிட்டது.
உங்களை ஏற்றுக்கொள்கிறோம். வாங்க, எதுவாக இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்,’ என்று ஆசை வார்த்தை கூறினர்.
இதையெல்லாம் நம்பிய காதல் தம்பதியினர், அவர்களுடன் காரில் ஏறிச்சென்றனர். ஆனால், அந்த கார் சூடுகொண்டப்பள்ளிக்குச் செல்லாமல் திடீரென்று கர்நாடகா மாநிலம் நைஸ் சாலையில் பறக்கத் தொடங்கியது.
பதற்றம் அடைந்த நந்தீஸும், சுவாதியும் காரை நிறுத்தும்படி கெஞ்சியும், கார் நிற்காமல் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் போய்தான் நின்றது.
நந்தீஸை அந்த கும்பல் மிரட்டியது. அப்படி பிரிந்து செல்லாவிட்டால், இருவரையும் தீர்த்துக்கட்டிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
காதல் தம்பதியினர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்தனர். கண்காணாத இடத்தில் ஓடிச்சென்று பிழைத்துக்கொள்கிறோம்…. விட்டுவிடுங்கள்… என்று கெஞ்சியுள்ளனர். குறிப்பாக சுவாதி, நந்தீஸின் குழந்தையை சுமக்கிறேன்…. எங்களை வாழ விடுங்கள்… என்று தரையில் புரண்டு அழுதிருக்கிறார்.
இதனை கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளாத அந்த கும்பல், நந்தீஸை 20க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டியுள்ளது.
அப்படியும் அந்த கும்பலின் வெறி அடங்கவில்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக இருவரின் முகங்களையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர். சுவாதியின் தலை முடியை அரிவாளாலேயே மழித்துள்ளனர்.
மேலும், கருவைச் சிதைக்கும் நோக்கில் அவரின் அடிவயிற்றுப்பகுதியையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர். அதன்பிறகே இருவரின் சடலங்களையும் காவிரி ஆற்றில் வீசிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, சுவாதியின் தந்தையான சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (40), பெரியப்பா வெங்கடேஷ் (43), புனுகன்தொட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகிய மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக சுவாதியின் மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45), உறவினர்கள் வெங்கட்ராஜ் (25), பாலவனப்பள்ளியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சாமிநாதன் (30) ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.