இளம்பெண் ஒருவரை வன்புணர்வு செய்த ஒரு நபர், தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் நோய் இருப்பதாகவும், தான் குற்றவாளி அல்ல என்றும் கூறி தன்னை விடுவிக்கக் கோருவதால், பாதிக்கப்பட்ட பெண், அந்த நபர் விடுதலையாகி விடுவாரோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கிறார்.
தனது ஆண் நண்பர் ஒருவருடன் ஒண்டாரியோவில் ஒரு வீட்டில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றிற்கு சென்றிருந்த அந்த பெண், அதிக மது அருந்தியிருந்ததால், இரவு தூங்கி விட்டு காலையில் வீட்டுக்கு செல்லலாம் என முடிவு செய்திருக்கிறார்.அதிகாலையில் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்த அவர், தான், Ryan Hartman (38) என்னும் நபரால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.அவரை வன்புணர்வு செய்த நபரோ, பேசாமல் எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.
அவர் பொலிசில் புகாரளித்ததையடுத்து Ryanஐ பொலிசார் கைது செய்தனர். முதலில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிவந்த Ryan, பின்னர் தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் நோய் இருப்பதாகவும், அதனால்தான் தவறு நிகழ்ந்து விட்டதாகவும் வாக்குமூலத்தை மாற்றிக் கூறியுள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் பாதிக்கப்பட்ட அந்த பெண். ஏனென்றால் Ryanக்கு அவர் குறிப்பிடும் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் ஒரு மனநோயாளியாக கருதப்பட்டு, சிகிச்சைக்கு அனுப்பப்படுவார். பின்னர் குணமானதும் வெளியில் விடப்படுவார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், கல்லூரியில் பட்டம் பெறுவதற்கு சில நாட்களுக்குமுன் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதால், மன அழுத்தத்திற்குள்ளும், போதை பழக்கத்திற்கும், தற்கொலை எண்ணங்களுக்கும் ஆளாகி துன்புற்று வருவதாக தெரிவிக்கிறார்.
ஒரு பரோல் அதிகாரியாக வேண்டும், குற்றவாளிகளுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும் என்றெல்லாம் கனவுகள் வைத்திருந்த அந்த பெண், தற்போது அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறார்.
தான் எப்படி வாழ வேண்டும் என்றெல்லாம் எண்ணியிருந்தேனோ அப்படி வாழவில்லை என்று கூறும் அவர், எப்படி தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது, எப்படி தனக்கு நேர்ந்த கொடுமையிலிருந்து மன ரீதியாக வெளியேறுவது என்று புரியாமலும், Ryan விடுதலை செய்யப்பட்டு விடுவானோ என்ற அச்சத்தில், தீர்ப்பு என்ன ஆகுமோ என்ற எண்ணத்திலும் காலத்தை கடத்தி வருவதாக திகிலுடன் தெரிவிக்கிறார்.