குடிபோதையில் தன் வீடு என்று நினைத்து இன்னொருவர் வீட்டு படுக்கையறையில் நுழைந்த ஒரு இளைஞர், தன் தவறுக்கு பிராயச்சித்தமாக அந்த வீட்டில் வாழும் தம்பதியினருக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார்.
சுவிட்சர்லாந்திலுள்ள Chur பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நுழைந்த ஒரு இளைஞர், அந்த வீட்டின் படுக்கையறையில் நுழைந்து அங்கிருந்த படுக்கையில் படுத்துக் கொண்டார்.
அதில் படுத்திருந்த அந்த வீட்டில் வாழும் தம்பதியினர் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவலளித்தனர்.
பொலிசாருடன் ஆம்புலன்சும் வந்து அந்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
போதை தெளிந்ததும் தன் தவறை உணர்ந்து வருந்திய அந்த இளைஞர், மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று அந்த தம்பதியினரிடம் மன்னிப்புக் கோரியதோடு, தன் தவறுக்கு பிராயச்சித்தமாக தேன் பாட்டில்களையும், CD ஒன்றையும் வழங்கினார். இந்த சம்பவம் அந்த நகருக்கு தெரிய வர, ஒரு வகையில் அவர் அந்த ஊரில் பிரபலமாகிவிட்டார்.
இதில் பிரச்சினை என்னவென்றால், தேவையில்லாமல் பொலிசாருக்கும் ஆம்புலன்சுக்கும் தொந்தரவு கொடுத்ததால் இப்போது அவர் அவர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
அவர் செலுத்த வேண்டிய தொகை 1000 சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.