மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நம்பர் 21 ஆம் திகதியான நேற்றைய தினம் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிப்பட்டுள்ளதால் அந்த அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று தமது மனுவில் கோப்பாய் பொலிசாரின் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதவான் இந்த மனு மீதான தீர்ப்பை 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோப்பாயில் இராணுவத்தின் 512ஆவது படைத்தளம் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல காணிக்கு முன்பாக உள்ள சிறிதரன் என்பவருடைய காணி துப்புரவு செய்யப்பட்டு அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே மாவீரர் நாள் தின நிகழ்வுகளுக்கு தடை கோரி கோப்பாய் பொலிஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுநேற்று பிற்பகல் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது மனுவில் எதிர் மனுதாரர் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
எந்த நபர் மீதும் குற்றச்சாட்டு இல்லை என்பதால் எதிர் மனுதாரர் குறிப்பிடப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டனர். அதனால் மனு மீதான கட்டளையை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வழங்குவதாக நீதிமன்று அறிவித்து மனுவை ஒத்திவைத்தது.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த மனுவைப் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.
2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு எனவும் அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் கடைப்பிடிக்கப்படுவதனால் மாவீர்ர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும் என்று பொலிஸார் மனுவில் கோரியுள்ளனர்.