நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் திடீர் வெளிநாட்டு பயணம் தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. அவசரகதியில் ஒன்றரை நாள் எதற்காக சுமந்திரன் வெளிநாட்டுக்கு பறந்தார் என்ற சர்ச்சை தெற்கு அரசியலில் சூடு பிடித்துள்ளது. சுமந்திரனின் வெளிநாட்டு பயணம் ஏன், அங்கு என்ன நடக்கிறது என தேசிய புலனாய்வு பணியகம் ஜனாதிபதிக்கு இன்று இரண்டு அறிக்கைகளும் சமர்ப்பித்துள்ளது.
சுமந்திரன் வெளிநாட்டு பயணம் தொடர்பான சர்ச்சை இன்று காலையிலிருந்து தெற்கு அரசியலில் சூடு பிடித்துள்ளது. இது குறித்து தமிழ்பக்கம் முக்கியமான பல தகவல்களை திரட்டியுள்ளது.
நேற்று மதியமளவில் சுமந்திரன் அவசரமாக இந்தியா பயணமானார். இந்த பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதல்ல. நேற்று மதியமே இதற்கான திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணித்தியால இடைவெளிக்குள் கட்சி தலைமையுடன் இது குறித்து கலந்துரையாடி, விமான பயணச்சீட்டு பெற்று இந்தியா பறந்துள்ளார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
புதுடில்லியில் பல்வேறு கலந்துரையாடல்களில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார்.
இன்று இரவு 9.00 மணிவரை சுமந்திரன் நாடு திரும்பவில்லை. இன்று பின்னிரவு அல்லது நாளை அதிகாலை அவர் நாடு திரும்புவார். நாளைய நாடாளுமன்ற அமர்வில் அவர் நிச்சயம் கலந்துகொள்வார் என தெரிகிறது.
இதேவேளை, சுமந்திரன் வெளிநாடு சென்றார் என்ற தகவல் பரவியதையடுத்த, பல்வேறு ஊடகங்களும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவரது பயணத்தை உறுதிசெய்ய முயன்றபோதும், சுமந்திரனின் பயணம் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென இந்திய தூதரகம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.