பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் போன்ற துரித உணவுகள் உடல் பருமன் ஏற்பட காரணமாக இருப்பதால் லண்டனில் உள்ள புகையிரத மற்றும் பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்களில் துரித உணவுகளுக்கான விளம்பரங்களுக்கு தடை செய்யப்படுகிறது.
இவ்வுத்தரவு எதிர்வரும் 2019 பெப்ரவரியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக லண்டன் நகர மேயர் சாதிக் கான் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துகள், சுரங்க புகையிரதங்கள் மற்றும் அனைத்து புகையிரதங்கள் மற்றும் சில புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட லண்டனின் பொதுப் போக்குவரத்து அனைத்திலும் பதப்படுத்தப்பட்ட உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்தடையினை அடுல்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் 82 சத வீத மக்கள் பதப்படுத்தப்பட்ட உணவுக்கு தடை விதிக்க ஆதரவைத் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளையும்விட லண்டனில்தான் குழந்தைப் பருவ உடல்பருமன் அதிக அளவில் மிக மோசமாக காணப்படுவதாகவும் லண்டனில் 11 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில் இந்த ஆண்டு மட்டுமே 44 சதவீதக் குழந்தைகளுக்கு உடல்பருமன் திடீரென அதிகஅளவில் ஏற்பட்டுள்ளமை இங்கிலாந்து பொது சுகாதாரத் துறையின் அதிகாரபூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் லண்டன் மேயர் த விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.