Facebook சமூக வலைத்தளத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அபுதாபி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Facebook இல் பகிரப்படும் புகைப்படங்களை திரட்டிவைத்து மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்த புகார் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து செயல்படும் அத்தகைய குற்றக்கும்பல்களின் பிடியில் சிக்கிப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.
Facebook இல் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படங்கள், காணொளிகள், தனிப்பட்ட உரையாடல்கள் ஆகியவற்றைச் சேகரித்து, அந்தத் தகவல்களைப் பயன்படுத்திக் குற்றக்கும்பல்கள் பணமோசடியில் ஈடுபடுவதாகக் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மோசடிக் கும்பலைச் சேர்ந்தோர் ஏதேனும் ஓர் இணையப் பக்கத்தின் இணைப்பை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவர்.
அதைச் சொடுக்கித் தகவல்களைப் படிக்கும்போது, இரகசிய மென்பொருட்கள் மூலம் தகவல்கள் களவாடப்படலாம்.
பின்னர் அந்தத் தகவல்களைக் கொண்டு மோசடிக் கும்பலைச் சேர்ந்தோர் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்குவர்.
எனவே, அத்தகைய இணையப் பக்கச் சுட்டிகளைச் சொடுக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட விவரங்கள், குடும்பப் படங்கள் போன்றவற்றை Facebook இல் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் அபுதாபி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.