நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைக்கு விரைந்து தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று காலிமுகத்திடல் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு சிவில், சமூக அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்திருந்த மேற்படி பேரணியில் சிவில், சமூக பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூகநல ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஆரம்பித்த குழப்பத்தினை நீங்களே தீர்த்து வைக்க வேண்டும், மனசாட்சி இல்லையா, எங்களுடைய பிள்ளைகள் இவற்றை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர், 2015 ஆம் ஆண்டு நீங்கள் கூறியவை பொய்யா, எங்களுடைய பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும், அறம் என்றால் என்னவென்று தெரியாதா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை கையில் ஏந்திய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டோர் பேரணியை முன்னெடுத்துச் சென்றனர்.