Share
சென்னையில் பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு, பாலூட்டியபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
காசிமேட்டை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் மனைவி செலஸ்டின் (23). தம்பதிக்கு நிஷாந்தி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் செலஸ்டின் மீண்டும் கருவுற்றார்.
இதையடுத்து கடந்த மாதம் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 12–ந் திகதி அந்த குழந்தை திடீரென இறந்தது.
பாலூட்டியபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக செலஸ்டின் கூறினார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, இறந்தது தெரிந்தது.
இதையடுத்து பொலிசார் செலஸ்டினிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது குழந்தையை தரையில் அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர் அளித்து உள்ள வாக்குமூலத்தில்,
எனது கணவர் சத்யராஜூடன் வேளச்சேரியில் கட்டிட வேலைக்கு சென்றிருந்தபோது அவருக்கு ஏற்கனவே ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, அவளுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.
ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டு அதனை மறைத்து என்னை 2–வதாக திருமணம் செய்து கொண்டது எனக்கு வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தியது.
1½ வயதில் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நான், இந்த குழந்தையையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதைவிட அந்த குழந்தையை கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன்.
இதனால் மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தையின் காலை பிடித்து, மண்டையை தரையில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை அலறி துடித்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. உடனே குழந்தையை தூக்கி தொட்டிலில் போட்டுவிட்டு குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடினேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் செலஸ்டினை கைது செய்துள்ளனர்.