பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் உட்பட நான்கு பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால், இந்தப் பிரேரணைகள் மீதான வாக்கெடுப்புகளை ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் புறக்கணித்து வருகின்றார்.
நான்கு பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்ட நாட்களில் நடைபெற்ற சபை அமர்வுகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இன்றும் சிவசக்தி ஆனந்தன் சபை அமர்வுக்கு வருகை தராமல் வாக்கெடுப்பை மறைமுகமாகப் புறக்கணித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
அவர்களில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இந்த மாதம் மைத்திரி – மஹிந்த தரப்புக்குத் தாவி பிரதி அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டார்.
கூட்டமைப்பிலிருந்து விலகியுள்ள தான் எதிர்க்கட்சி வரிசையில் சுயாதீன எம்.பியாகத் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்து வந்த சிவசக்தி ஆனந்தனும் மைத்திரி – மஹிந்த தரப்புக்குத் தாவவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான பிரேரணைகள் மீதான வாக்கெடுப்புகள் நடைபெறும் நாட்களில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. சபை அமர்வுகளில் பங்கேற்காமல் வாக்கெடுப்பை மறைமுகமாகப் புறக்கணித்து வருகின்றார்.
இது தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் எம்.பியின் கருத்தை அறிவதற்காக அவரின் கைத்தொலைபேசிக்கு இன்று பல தடவைகள் அழைப்பை ஏற்படுத்த முயன்ற போதிலும் அது பலனளிக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபை அமர்வுகளில் பங்கேற்று பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.