மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷேட குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான குழுவொன்றே மட்டக்களப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் இருவரை இனந்தெரியாத சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை செய்துவிட்டு, அவர்களிடமிருந்த இரு கைதுப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்த வவுணத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரின் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி எம்.ஜ.என் றிஸ்வி, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுணத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.