தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை ஒவ்வொரு முறையும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர்கள் தான் ரஜினியும் ஷங்கரும். அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் அந்த வளர்ச்சியை சிவாஜி, எந்திரனில் பார்த்து இருப்போம், தற்போது அடுத்தக்கட்டமாக உலகமே வியக்கும் 2.0 என்ற ஒரு படைப்பை இருவரும் கொடுக்க, ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தானதா? பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே அக்ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது.
இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ச்சிக்குழு அரசாங்கத்தின் கீழ் ஆராய்ச்சி செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும் இறந்து போகின்றனர்.
அதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் சிட்டியை மீண்டும் கொண்டு வர, சிட்டி அக்ஷய் குமார் திட்டங்களை முறியடித்ததா? என்பதை செம்ம மெசெஜுடனும் பிரமாண்ட காட்சிகளுடன் காட்டியுள்ளார் ஷங்கர்.
படத்தை பற்றிய அலசல்
ஷங்கர் இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் வேலை செய்வார் போல. ஒரு படத்தில் பிரமாண்டம் இருக்கலாம், ஆனால், படமே பிரமாண்டமாக இருக்க முடியும் என்றால் அது ராஜமௌலி, ஷங்கர் என்ற ஒரு சிலருக்கே சாத்தியம்.
மொபைல், நெட்வொர்க் வளர்ச்சி நம் வாழ்வில் எத்தனை ஆபத்துகளை தருகிறது, அதை விட நம் சுற்றுச்சூழலை அது எவ்வாறு பாதிக்கின்றது, பறவையின் அழிவு, மனித இனத்தின் அழிவிற்கான தொடக்கம் என்ற நல்ல கான்செப்டை தன் ஸ்டைலில் சொல்லி அசத்தியுள்ளார்.
அதிலும் ஏதோ விட்டலாச்சாரியார் படத்தில் வரும் ஆவிக்கதை போல் இல்லாமல், இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றவாரு ஆரா (Aura), பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி என்று கூறி எளிதில் மக்களுக்கு புரியும் படி கூறியுள்ளார், ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், லாஜிக் இல்லாத மேஜிக் தானே படமே, என்று கொண்டாடலாம்.
சரி கதை, ஷங்கர், பிரமாண்டம் இருக்கட்டும், சூப்பர் ஸ்டார் படத்தில் எப்படி என்று கேட்பது புரிகிறது, வசீகரன் கதாபாத்திரம், வாய்ஸ் மிகவும் மோசமான அதுவும் ஆங்கில வார்த்தைகளில் அத்தனை தடுமாற்றம் இருக்க, அட என்னடா இது சூப்பர் ஸ்டார் இப்படி ஆகிட்டார் என பேச, சிட்டி எண்ட்ரீ கொஞ்சம் எழுந்து உட்கார வைத்தது. அதை தொடர்ந்து 2.0 சிட்டி அதகளம் செய்ய, 3.0 சிட்டி(சர்ப்ரைஸ் ரோபோ) வர தியேட்டரே கொண்டாட ஆரம்பித்துவிட்டது.
இந்த நம்பர் 1, நம்பர் 2 இந்த போட்டியில் எல்லாம் நான் இல்லை, நான் எப்போதும் ஒன்லி ஒன் என இந்த வயதிலும் பஞ்ச் அடித்து இளம் ஹீரோக்களை அலற விடுகின்றார். அக்ஷய் குமார் அட இவர் படத்தில் இருக்கிறாரா, இல்லையா? என்று கேட்கும் அளவிற்கு செல்ல இடைவேளைக்கு பிறகு வரும் அவரின் ப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. வயதான கதாபாத்திரம் என்பதால் ஜெயபிரகாஷ் வாய்ஸும் அப்படியே பொருந்தி நிற்கின்றது.
எமி ஜாக்ஸன் வெறுமென வந்துபோகும் கதாபாத்திரம் தான் பெரிதாக ஒன்றுமில்லை, படத்திற்காக உழைத்த கிராபிக்ஸ் டீமை எழுந்து நின்று பாராட்டலாம். அதுவும் 3டி டெக்னாலஜியின் டைட்டில் கார்டிலேயே நம்மை இழுத்து விடுகின்றனர். கிளைமேக்ஸில் புல்லட் பறப்பது, பறவை அருகில் வருவது என அட இது தமிழ் படம் தானா, இல்லை ஹாலிவுட் படத்திற்கு வந்துவிட்டோமா என்று எண்ண வைக்கின்றது.
இப்படி படம் முழுவதும் பிரமாண்டம், காட்சிக்கு காட்சி ஆச்சரியம் என்று இருந்தாலும், ஷங்கரின் வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள் மாறவே இல்லை. அதாவது வித்தியாசமாக ஒருவரை கொலை செய்வதில் அவருக்கு அப்படி என்ன ஆசையோ, இந்தியன், அந்நியன், ஐ-யை தொடர்ந்து இதிலும் தொடர்கின்றது. அதுமட்டுமின்றி ஏதோ பொட்டிக்கட்டைக்கு போய் டீ வாங்கிட்டு வருவது போல் அசால்டாக தடை செய்யப்பட்ட ஆராய்ச்சி கூடத்திற்கு செல்வது எல்லாம் உச்சக்கட்ட லாஜிக் மீறல்.
படத்தின் டெக்னிக்கல் டீமிற்கு அடுத்த வருடம் அனைத்து விருதுகளும் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை, முத்துராஜின் கலை, ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் இன்ஜினியரிங், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங், எல்லாத்திற்கும் மேலாக ரகுமானின் பின்னணி இசை என அனைத்தும் தரம்.
க்ளாப்ஸ்
படத்தின் கதை, திரைக்கதை ஐ படத்தில் விட்டதை இதில் பிடித்துவிட்டார் ஷங்கர்.
படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னிக்கல் டீம்.
பிறகு என்ன சூப்பர் ஸ்டார் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் ஸ்டைலில் விளையாண்டுள்ளார். அக்ஷய் குமார் கஷ்டமான மேக்கப் போட்டும் அவர் காட்டிய மிரட்டல் எக்ஸ்பிரஷன்.
படத்தில் வரும் குட்டி குட்டி வசனம், மனுஷனுக்கு தற்போது தேவை டிவி, சினிமா, சாப்பாடு, மொபைல், நாலுபேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லை என்று ரஜினியிடமே ரோபோ சொல்வது என சுவாரஸ்யம் தான்.
பல்ப்ஸ்
படத்தில் எல்லையற்ற லாஜிக் மீறல்கள், சூப்பர் ஹீரோ படம் மன்னித்து விடலாம் என்றாலும், ப்ரொபசர் போரா மகன் நெகட்டிவ் எனர்ஜியை வெளியே விடும் காட்சியெல்லாம் காதில் பூ சுற்றல் தான்.
அக்ஷய் குமார் கதாபாத்திரம் அத்தனை கொடூரமாக காட்டிவிட்டு ப்ளாஷ்பேக்கில் அவரை அவ்வளவு சாதுவாக காட்டுவது கொஞ்சம் முரண்.
மொத்தத்தில் படம் முடிந்ததும் மொபைலை எடுக்கலாமா வேண்டாமா என்று ஒரு வகை எண்ணத்தை நமக்கே தோன்ற வைத்த ஷங்கரின் இந்த பாசிட்டிவ் எனர்ஜியே 2.0 விட 3.0 மீது எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கின்றது.