இறந்துவிட்டவர் வீட்டிற்கு வந்ததால் பெரும்பரபரப்பு காஞ்சிரங்குடாவில் சம்பவம்
மட்டக்களப்பு காஞ்சிரங்குடாவினைச் சேர்ந்த பொன்னம்பலம் விஜேந்திரன் (யோகன்) என்பவர் அண்மையில் இறந்துவிட்டதாக நம்பப்பட்டிருந்த நிலையில் 2018.11.29ஆம் திகதி அதாவது நேற்றைய தினம் வீடு திரும்பியிருந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலின் நிமிர்த்தம் வவுனியாவிற்குச் சென்றிருந்தார்.
பல நாட்கள் கடந்த நிலையில் அவர் வீடு திரும்பாதமையினை உணர்ந்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அவரோடு தொழிலுக்குச் சென்றவர்களிடம் இவரைப் பற்றி விசாரித்துள்ளனர்.
இதன்போது நபர் ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு கைகலப்பு வரை சென்று அதில் அவர் இறந்தமையினை அறிந்ததாக அவரது மனைவி கூறினார்.
அதன்படி அவருடைய மனைவி இவருடைய கொலைக்கு காரணமானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொலிசில் முறைப்பாடு செய்திருந்ததுடன் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணையும் செய்யப்பட்டார்.
இதேவேளை இவர் இறந்ததாக நம்பப்பட்ட நாளினைக் கணக்கிட்டு எதிர்வரும் 04.12.2018ஆம் திகதி 41ஆம் நாள் நினைவஞ்சலிக்கான ஏற்பாடுகள் அவரது குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் அதற்கான அழைப்பிதழ்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்றைய தினம் முச்சக்கர வண்டியில் தனது தந்தை வீட்டிற்கு வந்திறங்கியமை அதிசயத்தையளிப்பதாகவும் நம்பமுடியாதிருப்பதாகவும் அவரது பிள்ளைகள் தெரிவித்தனர்.