ஒரு கட்சிக்கு ஆதரவளித்ததன் மூலம் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை அடகு வைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கிடாச்சூரியில் நடைபெற்ற பிரதேச செயலக கலாசார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கலைஞர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து கலை, கலாசாரத்தை பாதுகாப்பது போன்று அரசியல் ரீதியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இன்றைக்கு தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை தமிழ் மக்களின் நலன்சார்ந்து இராஜ தந்திர ரீதியாக முன்னகர்த்தக் கூடிய முகங்களை கை நழுவ விட்டுள்ளார்கள்.
இன்று இந்த பாராளுமன்றத்தில் ஓரு பிரதமரை நியமிப்பதற்கு அல்லது பெரும்பான்மையை காட்டுவதற்கு 113 உறுப்பினர்கள் தேவையான நேரத்தில் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு கொண்டு முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களை கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு தடவை கூறுகிறார்கள் நாங்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவையும் ஆதரிக்கவில்லை. ஆக இருவரையும் ஆதரிக்கவில்லை என்றார்கள்.
பின்னர் இந்த நாட்டில் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. அதற்காக தான் ஆதரவளிப்பதாக சொல்லியிருந்தார்கள். அதனையடுத்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்து, நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இன்று இருவருக்கும் ஆதரவு இல்லை என்று கூறிய தமிழ் தலைமைகள் ஒரு கட்சிக்கு அல்லது ஓரு கட்சியை சேர்ந்த நபர் பிரதமராக அவர் வேண்டும் என்பதற்காக எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவளித்துள்ளார்கள். இதன் மூலம் தமிழ் மக்களை அடகு வைத்துள்ளார்கள். இதனை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும்.
அண்மையில் இராஜதந்திரிகளை சந்தித்த கூட்டமைப்பினர் தென்னிலங்கை அரசியல் நெருக்கடி குறித்து பேசியுள்ளார்களே தவிர தமிழ் மக்களது பிரச்சினை குறித்து பேசவில்லை எனத் தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரச அதிபர் திரேஸ்குமார் மற்றும் கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.