தனது தந்தை தமிழர் என்பது குறித்து தான் பெருமைப்படுகின்றேன் என குற்ற விசாரணை திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது பூர்வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன கருத்து வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் நிஷாந்த டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
“எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்பரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்டிற்காக சேவை செய்தவர்களாகும். அவர்கள் அனைவரும் குறித்து நான் பெருமைப்படுகின்றேன்.
அத்துடன் நான் மனித தன்மையை மதிக்கிறேனே தவிர நபர் ஒருவரின் இனத்திற்கு அல்ல. எனது கடமையின் போது கட்சி, நிறம், இனம், மதம் பேதங்கள் இல்லை. அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையிலேயே நான் சேவை செய்கின்றேன்.
எனது பிறப்பு சான்றிதழில் எனக்கு சிங்களவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நான் மனித இனத்திற்கே உரிமையாகின்றேன். சிங்களம், தமிழ் முஸ்லிமாக இருப்பதற்கு முன்னர் அனைவரும் மனிதனாக இருப்போம்.
அத்துடன் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனசாட்சிக்கு உண்மையாகவும், நாட்டின் சட்டத்திற்கமையவும் செயற்படுகிறேன். இனிமேலும் அப்படி தான் செயற்படுவேன்.
எனது கடமை தொடர்பில் பலர் கோபமடைகின்றார்கள். அது குறித்து நான் அதிர்ச்சியடைவதில்லை” என நிஷாந்த டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.