நிக்- பிரியங்கா திருமணம் இன்று ஜோத்பூர் அரண்மனையில் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஹிந்தி திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ராவும் பிரபல அமெரிக்க பாப் இசைப்பாடகர் நிக் ஜோனஸும் காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் நீண்ட நாள்களாக கிசுகிசுக்கபட்டு வந்தது. பிறகு இதை உறுதிசெய்யும் விதமாக, பிரியங்காவும் நிக் ஜோனஸும் பல இடங்களுக்கு ஒன்றாகச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி இருவரின் காதலை உறுதி செய்தன.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நிக், இந்தியா வந்து பிரியங்காவின் அம்மா மது சோப்ராவையும் பிரியங்காவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களையும் சந்தித்தார். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிங்கா, நிக் நிச்சயதார்த்தம் மும்பையில் நடைபெற்றது.
இந்நிலையில் இவர்களின் திருமணம் ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள உமத் பவன் அரண்மனையில் நேற்று கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இன்று அதே அரண்மனையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் சங்கீத் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தை கலக்கி வருகிறது.
அந்த புகைப்படத்துடன் பிரியங்கா தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, “ஒருவரை ஒருவர் மதித்தல், புதிய குடும்பம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றை இந்த சிறந்த உறவு நமக்குத் தந்துள்ளது. எனவே எங்களின் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்திய முறைப்படி நடக்கும் திருமணத்தில் மெஹந்தி நிகழ்ச்சி பெண்களுக்கு சிறப்பான ஒன்று. எங்கள் இருவரின் கனவு போலவே இன்று கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.