மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க கோரி தோட்ட தொழிலாளர்களால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சில தொழிலாளர்கள் வழமை போல் தொழிலுக்கு சென்றுள்ளமை மலையகத்தில் குழப்பநிலையை தோற்றுவித்துள்ளது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தைகளும் வேலை நிறுத்த போராட்டங்களும் முன்னெடுக்கபட்டு வந்தன.
இதற்கு ஆதரவாக நாடு முழுவதுமாக பெருந்தோட்ட மக்களுக்கு பல அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தது.
மலையக இளைஞர்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கொழும்பு காலி முகத்திடலிலும் நடைபெற்றது.
இந்த விடயம் தொடர்பாக முன்னால் பிரதமர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பேச்சுவாரத்தைகளும் நடத்தபட்டிருந்தது.
எனினும் இதுவரையில் எந்த விதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில் தற்போது தொடர்ந்து தோட்ட நிறுவனங்களை முடக்கும் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இதனால் சில தோட்டங்களின் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளதுடன் தேயிலை கொழுந்துகள் அரைக்காமல் காணப்படுவதோடு சில தொழிற்சாலைகளில் கள்ளதனமாக கொழுந்துகள் அரைக்கப்பட்டுள்ளதால் முறுகள் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இற்றிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் முறையாக நடைபெற்றாலும் இன்று (புதன்கிழமை) பல தோட்டங்களில் தொழிலாளர்களின் ஒரு சாரார் வேலைக்கும் ஒருசாரார் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தும் தங்கள் எதிர்ப்பை மேற்க்கொண்டு வருகின்றனர். இந் நிலை மலையத்தில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பில் வேலைக்கு செல்பவர்கள் கருத்து தெரிவித்த போது தாங்கள் கடந்த நாட்களில் வேலை நிருத்தம் செய்ய கூறியபோது வேலை நிறுத்தம் செய்தோம். ஆனால் இதுவரைக்கும் சம்பள உயர்வு இல்லை.
நாங்கள் வீட்டில் இருந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு யார் சாப்பாடு கொடுப்பது. ஜனவரி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்.
நாங்கள் 25 வீதம் வேலைக்குச் சென்றால் தான் முற்பணம் கிடைக்கும் அது கிடைத்தால் தான் சம்பளம் கிடைக்கும் வரைக்கும் உணவு பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
இந்நிலையில் அரசியல் நிலையும் மோசமாக உள்ளது எங்கள் கோரிக்கைகளை எந்த அரசாங்கத்திடம் சொல்லுவது? எனவே இதை உணர்ந்து செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளோம். நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க முடியும். சில நிறுவனங்கள் தருவதாக கூறுகின்றன. சில நிறுவனங்கள் முடியாது என கூறுகின்றன. இதன் காரணமாகவே தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.