பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் 27 வருடங்களுக்கு பிறகு பிரபலம் ஒருவர் ரஜினியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் அடுத்ததாக பேட்ட வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ரஜினி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது பிரபலம் சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சந்தோஷ் சிவனிடம் கேட்ட போது, அவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் 27 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான தளபதி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் நாயகி தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு ஒருசில மாதங்களில் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது.