ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட 5 வர்த்தமானி அறிவித்தல்களில் 4 அறிவித்தல்கள் சட்டவிரோதமானது.
நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது சட்டரீதியானது என்ற போதிலும் ஜனநாயக விரோத செயல். அரசியலமைப்பு பேரவை உயர் நீதிமன்றத்தில் வெற்றிடமாக இருக்கும் இரண்டு நீதியரசர்களை நியமிக்க பரிந்துரைத்துள்ள போதிலும் ஜனாதிபதி இன்னும் அந்த நியமனங்களை வழங்கவில்லை.
இரண்டு பேருக்கு இடையிலான பிரச்சினை காரணமாக நாடு அதளபாதாளத்திற்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நான் நாட்டையும் தீ வைத்து எரித்து விட்டே செல்வேன் என ஜனாதிபதி, அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார். இதற்கு அமைய அவர் நாட்டுக்கு தீ மூட்டியுள்ளார். சரத் பொன்சேகாவை போல், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்கள் ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார். மகிந்த ராஜபக்ச தற்போதாவது இதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் அப்பம் சாப்பிட்டு விட்டு துரோகம் செய்தார். தற்போது பிரதமர் பதவியை வழங்கி துரோகம் செய்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை குழப்பி விட்டுள்ளார். இப்படி முன்னோக்கி செல்ல முடியாது. மகிந்தவும் மைத்திரியும் தமது தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.