திவுலபிட்டி மரதகஹமுல்லை பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவன் வழங்கிய அறிவிப்பிற்கு அமையவே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவிக்கையில்,
நேற்று மாலை நான் நீர்கொழும்பு நகருக்கு சென்றேன். அப்போது எனது மனைவி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.
நான் மீண்டும் திரும்பிய போது… வீட்டின் முன்பக்கம் அமைந்துள்ள கதவினை பலமுறை தட்டினேன்.
10 நிமிடங்கள் வரை கடந்த பின்னரும் கதவினை திறக்க மனைவி வரவில்லை. வீட்டின் பின்புறம் சென்று பார்த்தேன்… பின்புறம் அமைந்துள்ள கதவு திறந்து கிடந்தது.
இதன்போது வீட்டின் உள்ளே பிரவேசித்த போது சமையல் அறையில் இரத்தம் படிந்த தடயங்கள் காணப்பட்டது.
அவசரமாக எனது மனைவியின் பெயர் கூறி அழைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். தொலைக்காட்சி அதிக சத்தத்துடன் இயங்கியபடி காணப்பட்டது.
எனது மனைவி கீழே மயங்கி விழுந்து கிடப்பதையும் கண்டேன்… உடனே மனைவியின் முகத்திற்கு தண்ணீர் தெளித்து அழைத்தேன்…பின்னர் அவளின் மார்பக பகுதியில் கையை வைத்து அழுத்தம் கொடுத்து பார்த்தேன்…. ஆனால் அவள் சுயநினைவிழந்தவாறு கிடந்தாள்.
எனது மனைவியை தூக்கி நான் எனது மடியில் அமரச்செய்ய முயற்சித்தேன்… அப்பொழுதே அவளின் உடலில் இரத்தம் கசிவது தெரிந்தது.
உடலின் அனைத்து பகுதிகளை அவதானித்தேன்…. எங்கிருந்து இரத்தம் கசிகின்றது என அவதானித்தேன்… கழுத்து பகுதியினையே முதலில் பார்த்தேன்… கழுத்தில் நெறிக்கப்பட்ட கைவிரல் தடயங்கள் காணப்பட்டன.
முகத்தில் தாக்கிய அடையாளங்களும் காணப்பட்டன.. அனால் இரத்த காயங்கள் காணப்படவில்லை.. குழப்பத்தில் தொடர்ந்து அவதானித்தேன்…. மனைவியின் வயிற்று பகுதியிலிருந்து இரத்தம் கசிவதனை கண்டுகொண்டேன்.
உடையை சற்று அகற்றி பார்த்தேன்.. வயிற்றில் பாரிய காயம்… பலமுறை கத்தியால் குத்தியதற்கான தடயங்கள் காணப்பட்டன…பின்னர் மனைவியின் கால்கள் இரண்டிலும் பலத்த வெட்டு காயங்கள்….துடிதுடித்துக்கொண்டு காவல் துறைக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியப்படுத்தினேன்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
இது தொடர்பில் காவல் துறையினர் தெரிவித்ததாவது…. நாங்கள் 42 வயதுடைய பெண் ஒருவரின் சடலத்தினை மீட்டுள்ளோம்.. அவரின் பெயர் திலூக்கா சஞ்சீவனி லிவோரா. இவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி, ஏன் கொலை செய்யப்பட்டுள்ளார், மற்றும் எவரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விடயங்களை விரைவில் அறிவிப்போம். என தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த பெண் திருமணம் செய்து ஒரு வருடம் மாத்திரமே கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.