ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை அவர் முன்னரே இழந்துவிட்டார் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று அவர் வெளியிட்ட உரைக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
“19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு இணங்க, ஜனாதிபதிக்கு பிரதமரை நியமிக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை. இந்த நிலையில், நேற்றைய அவரது உரைக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம்.
18 ஆவது திருத்தத்தில் தான் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. இதனை இல்லாதொழிக்கத் தான் நாம் 2015 ஆம் ஆண்டில் வெற்றிப்பெற்றோம்.
நான், ஜனாதிபதியை சந்தித்தபோதும் இதுதொடர்பில் கூறினேன். ஜனவரி மாதத்தில் இருந்து நாட்டை கொண்டுசெல்ல ஒரு ரூபாய் கூட இல்லை. டிசம்பருக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைத்து வரவு – செலவுத் திட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
அவரை ஜனாதிபதியாக நியமித்தமையை இட்டு நாம் இப்போது கவலையடைகிறோம். இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அவர் தான் காரணம்.
ரணில் மீது தற்போது அவர் குற்றம் சுமத்துகிறார். ஆனால், மக்களுக்கு எது உண்மை என்பது தெரியும். நாட்டில் ஏற்பட்டள்ள பாதிப்பால் ஐக்கிய தேசியக் கட்சியா பாதிக்கப்பட்டுள்ளது?- இல்லை.
மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித்தான் பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளது. கொஞ்ச நாள் சென்றால் ஜே.வி.பி.க்கும் அடுத்த இடத்துக்கு இந்தக் கட்சி சென்று விடும். இதற்கெல்லாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் காரணம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.