இந்தோனேசியாவின் லம்பொக் தீவில் 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 01:02 மணியளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, உயிரிழப்புகள் எவையும் சம்பவிக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
உலகில் நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படும் நாடாக இந்தோனேசியா காணப்படுகிறது. எரிமலைகள் மற்றும் பசுபிக் அபாய கோட்டின் அருகில் காணப்படுவதால், பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.
அந்தவகையில், இந்தோனேசியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 7000 நிலநடுக்கங்கள் பதிவாகுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முதலாம் திகதி 6.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.
இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் லம்பொக் தீவை உலுக்கிய 7.5 அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 384 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமன்றி கடந்த 2004ஆம் ஆண்டு முழு உலகையும் உலுக்கிய சுனாமியில் இந்தோனேசியாவே பாரிய அழிவை எதிர்கொண்டது. அந்நாட்டில் மாத்திரம் 120,000இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.