அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ்ஷின் இறுதிக்கிரியை இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
அவரது சொந்த ஊரான டெக்ஸாஸ் மாநிலத்தில் இறுதிக்கிரியை இடம்பெறவுள்ளது. அதற்காக, டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹியூஸ்டன் நகருக்கு அவரது பூதவுடல் நேற்று கொண்டுசெல்லப்பட்டது.
அன்னாரின் பூதவுடல் இன்று காலை முதல் புனித மார்டின் எபிஸ்கோபஸ் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதன் பின்னர் அவரது குடும்பத்தார் மற்றும் அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இறுதிக்கிரியை இடம்பெறவுள்ளதோடு, அவரது மனைவியான பார்பரா புஷ்ஷின் கல்லறையறுகே பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக 1989முதல் 1993ஆம் ஆண்டுவரை பதவிவகித்த ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ், தனது 94ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்றுமுதல் அவரது பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வந்ததோடு, தலைநகர் வொஷிங்டனில் நேற்று அரச இறுதிஅஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதனை முன்னிட்டு நாடெங்கும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு, அரச விடுமுறையும் வழங்கப்பட்டது.
அரச இறுதிஅஞ்சலி நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, பில் கிளின்டன், ஜிம்மி கார்டர், ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல், ஜோர்தான் அரசர் இரண்டாவது அப்துல்லா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புகழுரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.