கனடாவில் வைத்து ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதியியல் அலுவலர் மெங் வான்ஷூ கைது செய்யப்பட்டமை தொடர்பாக சீனா கடும் கண்டனங்களை வௌியிட்டுள்ளது. கனடாவிற்காக சீனாவின் தூதரகம் நேற்று (புதன்கிழமை) இது தொடர்பாக விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதில் “மெங் எந்த குற்றமும் செய்யவில்லை, இந்த கைது நடவடிக்கை அவரது மனித உரிமைகளை மீறும் வகையில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவும், அமெரிக்காவும் உடனடியாக தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
நிதியியல் அலுவலர் மெங் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பிணை மீதான விசாரணை நாளை (வௌ்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக கனடாவின் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஹூவாவி வௌியிட்டுள்ள அறிக்கையில், மெங் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, குறிப்பிடப்படாத குற்றச்சாட்டு ஒன்றுக்காக கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அவர் மீதாக குற்றச்சாட்டுகள் தொடர்பாக மிக சொற்ப தகவல்களே வௌியிடப்பட்டுள்ளதுடன், மெங் எவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்பது குறித்து சரியான புரிதல் ஏற்படவில்லை என்று ஹூவாவி நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.