பிரித்தானியாவில் 15 வயது மகளை காப்பாற்றுவதற்காக உடலின் பல்வேறு பகுதிகளில் கத்திக்குத்து பட்ட தாய் உயிருக்கு போராடி வருகிறார். எசக்ஸ் கவுண்டியை சேர்ந்தவர் டிரேசி லார்கவுஸ்கி (37). இவரது மகள் ஷகிரா (15). ஷகிரா தனது வீட்டருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மகளை அழைத்து வர டிரேசி சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஷகிராவை கத்தியால் குத்தும் நோக்கில் அவரருகில் பாய்ந்துள்ளார். அதை பார்த்து பதறிய டிரேசி மகளை காப்பாற்ற குறுக்கே புகுந்தார். அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர் டிரேசியின் மார்பகத்தின் மீது வேகமாக கத்தியால் குத்தினார். இதில் அவரின் நுரையீரல் சேதமடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து உயிருக்கு போராடிய டிரேசியை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் மயக்க நிலையிலிருந்து வெளியில் வந்து பேசியுள்ளார். கத்தி குத்தி பட்ட நிமிடமே நான் இறந்துவிட்டேன் என நினைத்தேன், ஆனால் சிகிச்சையில் இருக்கிறேன் என்பதை அறிந்து நான் அதிர்ஷடம் செய்தவள் என்றே நினைத்தேன்.
காரணம் கத்தியானது என் மார்பை கிழித்ததோடு இடது நுரையீரலையும் கிழித்தது. சிகிச்சையின் போது இரு முறை இறந்து மீண்டும் உயிர் பெற்றேன். முக்கியமாக என் நுரையீரலை மீண்டும் இயங்க வைக்க மருத்துவர்கள் போராடுகிறார்கள். என் மகளின் உயிரை எப்படியோ காப்பாற்றி விட்டேன் என கூறியுள்ளார்.
இதனிடையில் டிரேசியை கத்தியால் குத்தியது சம்மந்தமாக 22 வயது நபரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.