அண்மையில் கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் தலைமை அதிகாரி கலாநிதி ஐ.எச்.கே.
மஹாநாம மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ. திஸாநாயக்க ஆகியோர் கைதுசெய்யப்பட்ட நேரத்தில் குறித்த ஹோட்டலில் ஜனாதிபதியின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் இருந்தாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் 3 ஆம் திகதி இந்த அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கான அனுமதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய வணிகர் ஒருவரிடம் இருந்து குறித்த ஆதிகாரிகள் இருவரும் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்று அதனை வாகன தரிப்பிடத்தில் எண்ணிக்கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர்.
அந்த நேரத்தில் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன ஹோட்டலில் இருந்ததாகவும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் உடனடியாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்னறு வீட்டில் விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மருமகன் திலின சுரஞ்சித் ஹோட்டலில் அறை ஒன்றில் இருந்தாகவும் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட 20 மில்லியன் ரூபாவிலிருந்து, ஒரு பகுதி முக்கிய பிரமுகர் ஒருவருக்கு பங்காக வழங்கப்படவிருந்ததாக தெரியவந்துள்ளது.