நாடாளுமன்றத்தைக் கலைத்த அரச தலைவரின் அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான எந்தவொரு ஏற்ப்பாடுகளும் இல்லை.
அரசமைப்பை அரச தலைவர் மீறியிருந்தால், அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தினுள்ளேயே மேற்கொள்ள முடியும். இவ்வாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தனது சமர்ப்பணத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை கலைத்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசிதழ் அறிவிப்பை நவம்பர் 9ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.
அதனைச் சவாலுக்கு உட்படுத்தி 13 மனுக்கள் கடந்த மாதம் 12ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கடந்த மாதம் 13ஆம் திகதி இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
மனுதாரர்கள் கோரியவாறு, அரச தலைவரின் அரசிதழ் அறிவிப்புக்கு மன்று இடைக்காலத் தடை விதித்திருந்தது. வழக்கு மீதான விசாரணை, டிசெம்பர் மாதம் 4, 5, 6ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 13ஆம் திகதி மூன்று நீதியரசர்கள் ஆயமே இடைக்காலக் கட்டளையை வழங்கியிருந்த நிலையில், 7 நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்பாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று, இடைபுகு மனுதாரர்களில் ஒருவரான ஜி.எல்.பீரிஸ் கோரியிருந்தார்.
இந்த நிலையில் 7 நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்பாக மனுக்கள் நேற்றுமுன்தினம் காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மனுதாரர்கள் தரப்புச் சமர்ப்பணங்கள் நிறைவடைந்திருந்த நிலையில், சட்டமா அதி◌பர் தனது சமர்ப்பணத்தை நேற்று முன்வைத்◌த◌ார்.
அவர் மன்றில் மேலும் தெரிவித்ததாவது,
அரச தலைவர் அரசமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தைக் கலைத்ததுள்ளார். அரச தலைவர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்வதற்கு எவ்விதமான அதிகாரங்களும் இந்த மன்றுக்கு இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.
அரச தலைவர் அரசமைப்பை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக அரசமைப்பின் 38 (2) அ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் சரத்தின் பிரகாரம் அரச தலைவர் அரசமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக நாடாளுமன்றத்திலேயே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
அந்தத் தீர்மானம் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பட்டால் மாத்திரமே அதனை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க முடியும்.
அரச தலைவர் அரசமைப்பை மீறியிருந்தால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் குற்றவியல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும், என்று குறிப்பிட்டார்.
சட்டமா அதிபரின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இடைபுகு மனுதாரர்களின் சமர்ப்பணங்கள் இடம்பெற்றன. விசாரணை இன்றும் தெ◌ாடரவுள்ளது.