ஆளுநரின் ஐரோப்பிய விஜயத்தின் போது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” விடுத்த வேண்டுகோளின் பேரில், புங்குதீவில் இருண்ட பகுதிகளுக்கான வீதிவிளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக மடத்துவெளி, ஊரதீவு முதல் குறிச்சிக்காடு வரையான பகுதிக்கு வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆளுநர் (05.12.2018) ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஆளுநர் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் தலைவர்” சொக்கலிங்கம் ரஞ்சன், தீவகத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கான குளங்கள் புனரமைக்கப்படல் வேண்டும், மக்களின் பாதுகாப்பு கருதி வீதி விளக்குகள் பொருத்தப்படல் வேண்டும், தீவகத்தில் கல்வித் தேவைக்காக ஆசிரியர்களின் ஆளணியினை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தார்.
அது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டத்தினை இன்றயதினம் கூட்டிய ஆளுநர் வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆரம்பித்ததோடு புங்குடுதீவில் வெளிச்சவீட்டிற்கு செல்லும் பாதையினை செப்பனிடும் பணியினையும் ஆரம்பித்து வைத்தார்.
நாகதீவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் புங்குடுதீவு வெளிச்சவீட்டினையும் பார்வையிடும் வகையில் வீதியினை செப்பனிட்டு அப்பகுதியினை அழகுபடுத்தும் பணியினையும் ஆரம்பித்து வைத்தார்.
புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தினை அண்மித்த கடற்கரை பகுதியினை அழகுபடுத்துவதற்கான மரங்களை நாட்டி வைத்த ஆளுநர் தீவுப் பகுதிக்கான நுளைவாயில் அமைந்துள்ள பகுதியில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையார், புத்தர், மாதா சொரூபங்களையும் ஒரே இடத்தில் பிரதிஸ்டை செய்யும் பணியினையும் பார்வையிட்டார். – புங்குடுதீவு மண்ணின் மைந்தன்