வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். இந்த நோய் பற்றியும், அதன் விளைவுகள், சிகிச்சை முறை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
இன்றைய சூழ்நிலையில் நமது உணவு பழக்க வழக்கம், இதர காரணிகளால் வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். மருத்துவ வளர்ச்சியால் இந்த நோய்க்கு உயர் சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை என்பதே உண்மை.
ரத்த நாளங்கள் இதயத்திற்கு வேண்டிய ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன. இதயம், இடைவிடாது துடிப்பதற்கு வேண்டிய சக்தியை ரத்தநாளங்கள் மூலமே பெறுகிறது.
இதில் அடைப்பு ஏற்பட்டால், இதய தசைகளுக்கு தேவையான ரத்தமும், ஆக்ஸிஜனும் கிடைக்காது. இதனால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு உண்டாகிறது.
நெஞ்சுவலி என்பது நீண்டகாலமாக இருக்கக்கூடிய நிலையான வலி என்றும் புதிய அல்லது சிறிது சிறிதாக அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையற்ற வலி என்றும் கூறலாம். மூன்றாவது வலியாக ரத்தநாளத்தை சுற்றியுள்ள தசையில் ஏற்படும் திடீர் சுருக்கத்தால் தோன்றும் மாறுபட்ட நெஞ்சுவலி ஆகும். ரத்த நாளத்தில் தோன்றும் ரத்த உறைகட்டிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.
முதல்வகை மருந்துகளின் மூலம் குணப்படுத்தலாம். 2-வது வகை வலி ஏற்பட்டால் ஆஸ்பத்திரியில் மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும். மாறுபட்ட நெஞ்சுவலியின் அறிகுறிகள். உணர்ச்சி வயப்பட்ட அழுத்தம், குளிர் தாக்குதல், புகை பிடித்தல் ஆகிய காரணங்களால் கூட ஏற்படலாம்.
இந்த வலி சிறிது நேரமே இருப்பதோடு பொதுவாக உறக்கம் கலையும் விதத்தில் இரவு நேரத்தில் ஏற்படும். ரத்த ஒட்டம் தடைபடும் போது ஒழுங்கற்ற நாடித்துடிப்பும் ஏற்படலாம்.
மாரடைப்பு நிகழ்கின்ற நேரத்தில் ரத்த ஓட்டத்தில் எந்தவிதமான அறிகுறியை கூட காட்டாமலும் இருக்க வாய்ப்பு உண்டு. இதில் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைவதால் வலியை உணரும் தன்மை குறைந்திருக்கும். சில சமயம் இருதயம் பாதிப்படைகின்ற போது உடல் அசதியும், படுக்கும் போது மூச்சுத்திணறலும் ஏற்படலாம்.
ரத்த நாளத்தில் நிரந்தரமாகவோ, 30 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரையோ அடைப்பு நீடித்தால் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படும் போது, பொதுவாக 15 நிமிடங்கள் வரை கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தும், சில நேரத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவும் வரவும் வாய்ப்புண்டு. உடைந்த அல்லது விரிசலான ரத்த நாள கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் ரத்த உறைவு, அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு வருகிறது. இந்த உறைக்கட்டியை கரைக்கும் மருந்துகளை மாரடைப்பு நோய் சிகிச்சை முறையின்போது பயன்படுத்துகிறோம்.
இந்த நோயால் இருதய தசைகள் மீண்டும் செயல்படமுடியாத அளவுக்கு சேதமடைதல், நாடிதுடிப்புகளில் பாதிப்பு ஏற்படுவதாலும் மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் மூலம் மரணத்திலிருந்து உயிர் பிழைத்து வருகிறார்கள்.
கடுமையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய நெஞ்சுவலி, இடது தோளுக்கும், இடது பக்க முதுகுக்கும் சில சமயம் இடது தாடைக்கும் பரவும், வயிற்றின் மேல்பகுதியில் வலி, மூச்சுத்திணறல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி, அதிகமாக வியர்த்தல், அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும்.
இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். முடிந்தால் மென்று சாப்பிடுகிற ஆஸ்ப்ரின் மாத்திரையையும், சப்பி சாப்பிடுகிற சார்பிட்ரேட் மாத்திரையையும் உடனே சாப்பிடவேண்டும்.
நம்முடன் இருக்கும் நபருக்கு மூச்சு நின்றுவிட்டால், உடனே இருதய நுரையீரல் முதலுதவி செய்யவேண்டும். மூச்சுநின்ற சில விநாடிகள் மட்டுமே ஒருவர் உயிர்த்திருக்க முடியும். எனவே, இந்த குறுகிய நேரத்திற்குள் இதை செய்யவேண்டும். எனவே, அனைவரும் இதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
மாரடைப்பு ஏற்பட்ட ஒருமணி நேரத்திற்குள் மருத்துவ உதவி பெறுவது மிக, மிக அவசியம். அவ்வாறு செய்தால் உயிரைக் காப்பாற்றலாம்