இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான், சூசை ஆகிய புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவ தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
மேலும் பொட்டு அம்மான் நோர்வேயில் உயிருடன் உள்ளார் என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“2009 மே மாதம் 19ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் வைத்து போர்முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரபாகரன், சூசை உள்ளிட்ட தலைவர்களின் சடலங்கள் அங்கிருந்தே மீட்கப்பட்டன.
இருப்பினும் பொட்டு அம்மானின் சடலம் அங்கிருந்து மீட்கப்படவில்லை. அவரின் மனைவியின் சடலமே அங்கிருந்து மீட்கப்பட்டது.
மே 19ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்கு பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது.
வடக்கு கடற்கரைக்குசென்று ஐந்துபேருடன் தப்பிச் செல்வதற்கு பிரபாரகன் முயற்சித்தார். அங்கு பொட்டுஅம்மானும் இருந்துள்ளார்.
அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துள்ளார். இந்த தகவலை கே.பி. வெளியிட்டார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனுடனேயே பொட்டு அம்மான் இருந்தார். அவர் நோர்வேயிக்கு தப்பிச் செல்லவில்லை. அவர் உயிருடன் இல்லை என்றே நாம் நம்புகிறோம் என்றார்.