முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் நூறு பேர் வரையானே மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
முல்லைத்தீவில் 28 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அடைமழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்புவாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொக்குத்தொடுவாய் வடக்கு, கருநாட்டுக்கேணி கிராம மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் குறித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
35 வருடங்களுக்கு பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இந்த கிராம மக்கள் இன்றும் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற நிலையில், அடை மழை காரணமாக 45இற்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதேவேளை செல்வபுரம் பகுதியிலும் பாதிப்புகள் காணப்படுவதாகவும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு உதவிகளை வழங்கவுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.