யுத்தத்தின் இறுதி தருணத்தில் வெடிகுண்டை வெடிக்கவைத்து விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் தற்கொலை செய்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொட்டு அம்மான் வெளிநாட்டில் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் மாத்திரமே காணப்பட்டனர். அவர்களின் 70 பேர் முதலில் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சேர்த்து ஐவர் காணப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முனைந்தனர். அதில் பொட்டு அம்மானும் ஒருவராவார்.
இருப்பினும் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த பொட்டு அம்மான், தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு இராணுவத்தினால் உறுதியும் செய்யப்பட்டது.
இதன்போது, கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார். அத்துடன் பிரபாகரன் இருக்குமிடத்தை அவர் தெரிவிக்கவில்லை.
ஆனால், பொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டாரென பொய்யான தகவலை விநாயகமூர்த்தி முரளீதரன் தற்போது பரப்பி நாட்டில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றார்” என சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.