நாமக்கல் மாவட்டத்தில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளையை பொலிஸார் கைது செய்யுள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பெரியபள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (21).
4 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் படித்து வந்தபோது, அருகே உள்ள பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. கல்லூரி படிக்கும்போது பல இடங்களுக்கு சென்ற காதல் ஜோடி நெருக்கமாக இருந்ததால், சரஸ்வதி கர்ப்பம் அடைந்ததாகவும், கார்த்திக் அறிவுறுத்தலின்பேரில் அதனை கலைத்ததாகவும் தெரிகிறது.
கல்லுரி முடித்த பின்னர், கார்த்திக் கூறியபடி சென்னை வந்த சரஸ்வதி, செல்போன் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலையில் கார்த்திக் பணிபுரிந்து வந்துள்ளார்.
5 மாதங்களுக்கு முன்னர் கோவில் ஒன்றில் வைத்து சரஸ்வதியின் கழுத்தில் தாலி கட்டிய கார்த்திக், அவரோடு சேர்ந்து குடும்பம் நடத்தியும் வந்துள்ளார். அப்போது மீண்டும் கர்ப்பமடைந்த சரஸ்வதியிடம், இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை என கூறி, கர்ப்பத்தை கலைக்க வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமையன்று சொந்த ஊரான பரமத்திவேலூருக்கு வந்த கார்த்திகேயன் இரண்டாவது திருமணத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருவதாக சரஸ்வதிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, கார்த்திகேயனை பார்ப்பதற்காக பாலப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு கார்த்திகேயனின் உறவினர்கள் சரஸ்வதி மீது தாக்குதல் நடத்தி விரட்டியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலையம் சென்ற சரஸ்வதி, கார்த்திகேயன் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கார்த்திக்கை மாலையுடன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.