எம்.ஜி.ஆருடனான ஜெயலலிதாவின் உறவு எழுபதுகளின் மத்தியில் சிக்கலானது. உடை விஷயங்களில் இருந்து ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். இத்தனைக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் 33 வயது வித்தியாசம்.
ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா அவரை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார். 1972ல் எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கி அரசியலில் ஆழ்ந்து போனதும் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் குறைந்துபோனது.
தெலுங்கிலும் கன்னடத்திலும் நடிப்பதில் மிகவும் மும்முரமானார் ஜெயலலிதா. அப்போதுதான் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடன் நட்பு ஏற்பட்டது. ஷோபன் பாபு எம்.ஜி.ஆரைவிட வயதில் இளையவர். அது தீவிரமான நட்பாக மலர்ந்தது. சில ஆண்டுகாலம் ஷோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்!
ஷோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் ‘வாழ்ந்ததை’ ஏன் மெனக்கெட்டு மறைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக அனுப்பியுள்ளார். 1980-ம் ஆண்டு சோபன் பாபு- ஜெயலலிதாவை இணைத்து மும்பையில் இருந்து வெளியான ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏடு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை குமுதம் வார இதழ் 1980-ல் மொழிபெயர்த்து வெளியிட்டது. இதை பின்னாளில் திமுகவின் முரசொலி நாளேடும் பதிவு செய்திருந்தது. ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ’அன்புடையீர், உங்கள் நிருபர் நன்றாக குழம்பி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆர்.ஜெயராம் என்பது மறைந்த என் தந்தையின் பெயர். சாதாரணமாக கடிதப் போக்குவரத்து அத்தனையிலும் நான் ஜெயலலிதா ஜெயராம் என்றே கையெழுத்திடுவது வழக்கம்.
நான் ஜெயராமின் மகள் என்பதை உங்கள் நிருபர் நான் படித்த பிரஸ்ன்டேஷன் கான்வென்ட், சர்ச் பார்க் பள்ளி பதிவாளரிடம் கேட்டு, பார்த்து தெளிவடையலாம். குமாரி ஜெயலலிதா போதாது என்றால் தமிழ்நாடு கிரிக்கெட் அஸோஸியேஷனில் குமாரி ஜெயலலிதா ஜெயராம் என்ற பெயருடன் நான் மெம்பராகி உள்ளதையும் பதிவுப் புத்தகங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஷோபன் பாபுவுடன் நான் கடந்த 7 ஆண்டுகளாக ‘கோயிங் ஸ்டெடி’. அவர் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்பதைப் பெருமையுடன் உணர்வதால் இந்த நட்பு என் ஆயுள் உள்ளவரை நீடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மறைக்கவும் விரும்பவில்லை அவருக்கு ஏற்கனவே மணமாகி இருப்பதால் என்னைத் தற்சமயம் மணக்க இயலாது இருக்கிறார்.
ஆகவே என் மிஞ்சிய வாழ்நாளை மிஸ் ஜெயலலிதா ஜெயராம் என்று இருப்பதென முடிவு செய்திருக்கிறேன். ஷோபன் பாபுவின் நட்பை நான் என்றுமே மூடி மறைத்தது கிடையாது. தென் இந்திய திரை உலகு சம்பந்தப்பட்டவர்கள் இதை நன்கு அறிவர். நடிகை என்ற இமேஜையோ மீண்டும் திரை உலகில் பிரவேசம் செய்வதையோ குறித்து அலட்டிக் கொள்ளாத காரணத்தால் மிகுந்த பிரயத்தனப்பட்டு எதையும் மக்களிடம் இருந்து மறைக்கும் நிலைமை எனக்கு இல்லை’’ என ஜெயலலிதா எழுதியிருந்தார்.
சோபன் பாபுவை தம்மால் திருமணம் செய்யாமல் போனது ஏன் என்பது தொடர்பாக குமுதம் வார இதழுக்கு ஜெயலலிதா அளித்திருந்த பேட்டியில் விவரித்திருக்கிறார். 1980-ம் ஆண்டு குமுதம் இதழுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில்,
நிருபர்: சோபன்பாபுவுடன் உங்களது உறவு எப்படிப்பட்டது?
ஜெயலலிதா:“ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்”
நிருபர்: அப்படியானால் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”
ஜெயலலிதா: ’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்”.
நிருபர்: சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
ஜெயலலிதா: “அது தெரிந்திருப்பதால்தான் அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில், நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”
நிருபர்: “இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?”
ஜெயலலிதா:“கோயிங் ஸ்டெடி!”
நிருபர்: ஏற்கனவே திருமணமான ஒருவருடன் வாழ்க்கை நடத்துவது தவறில்லை என்பது உங்கள் அபிப்ராயமா?
ஜெயலலிதா: ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்தபின்புதான் இந்தப் பொதுவான கேள்விக்கு பதில் அளிக்க முடியும். ஆனால், எந்த கன்னிப் பெண்ணும் வேண்டும் என்று திட்டமிட்டு ஏற்கனவே திருமணமான ஒருவரை காதலிப்பது இல்லை. எந்தப் பெண்ணுமே தனக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். அவர் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள். நானும் அப்படித்தான் முதலில் கனவு கண்டேன்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஷோபன் பாபுவைச் சந்தித்தவுடன் என் மனம் அவர் மீதே பற்றுக் கொண்டுவிட்டது. திட்டமிட்டுச் செய்த காரியமல்ல இது. அவரை முதலில் சந்தித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது.
அது அவருடைய தவறும் அல்ல. என்னுடைய தவறும் அல்ல. அவர் மனைவியை விவகாரத்து செய்து என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? எத்தனையோ பேர் அப்படிச் செய்யவில்லையா? என கேட்கலாம். ஆனால் நாங்கள் இருவரும் அப்படிச் செய்ய விரும்பவில்லை.
அவருடைய மனைவி எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் எதற்காக நிராகரிக்கப்பட வேண்டும்? தவிர அவர் மனைவியின் உடல்நிலையும் சரியில்லை. ஆரோக்கியம் இல்லை. என்னை ஷோபன் பாபு சந்திக்கும் முன்பே அவர் மனைவியின் ஆரோக்கியம் சீர் குலைந்திருந்தது. அப்படி இருக்க, அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தருவது நியாயமாகாது என்று எண்ணினோம்’ என அவர் அளித்திருந்த பேட்டியும் ஷோபன் பாபுவுடன் ஜெயலலிதா வாழ்க்கை நடத்தியதை உறுதிப் படுத்துகிறது. பிறகு 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா. அதன்பிறகு எம்.ஜி.ஆரில் அரவணைப்பில் இருக்கத் தொடங்கினார்