இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலையை புரிந்துகொண்டு மஹிந்த ராஜபக்ஷ தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான றொபேர்ட் பிளேக் இதனை தெரிவித்துள்ளார்.
“ராஜபக்ஷர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்தோ – பசுபிக்கில் விரிவடையும் அரசியல், இராஜதந்திர மோதலும்” என்ற தலைப்பில் கொழும்பு பத்திரிக்கை ஒன்றில் வெளியான கட்டுரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் தற்போதைய அரசியல் முட்டுக்கட்டைநிலை அடுத்த வருடம் ஒரு ராஜபக்சவின் தலைமையில் தெரிவுசெய்யப்படக்கூடிய அரசாங்கமொன்றுக்கு அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அளிக்கக்கூடிய எதிர்கால ஆதரவுக்கு தங்களது தற்போதைய செயற்பாடுகள் கொண்டுவரக்கூடிய விளைவுகள் குறித்து மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் சிந்தித்துப் பார்ப்பதற்கான முக்கியமான சந்தர்ப்பமொன்றை வழங்கியிருக்கிறது.
பிரதமர் ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் அரசாங்க அமைச்சுக்களுக்கு நிதியை நிறுத்துவதற்கான வேறு இரு தீர்மானங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற போதிலும், பதவியில் இருந்து இறங்க அவர் மறுத்திருக்கிறார்.
அவரின் இந்த மறுப்பு இலங்கையின் அரசியலமைப்பு மீது அவருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இருக்கக்கூடிய பற்றுதலைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பது மாத்திரமல்ல, தங்களதும் கட்சியினதும் எதிர்காலத்துக்கு அநாவசியமான சேதத்தை ஏன் அவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்ற கேள்வியையும் கிளப்புகிறது.
இவ்வருட முற்பகுதியில் ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவும் உள்ளூராட்சித்தேர்தல்களில் பெற்ற பெருவெற்றி இலங்கையில் அவர் தொடர்ந்தும் பெரும் செல்வாக்குடன் விளங்குகிறார் என்பதை தெளிவாக வெளிக்காட்டியது.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படக்கூடும். அதில் போட்டியிடமுடியாதவாறு அரசியலமைப்பு மஹிந்த ராஜபக்ஷவை தடுக்கிறது என்றபோதிலும் அவரது சகோதரர் பலம்பொருந்திய ஒரு வேட்பாளராக நிற்கக்கூடும்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இறங்கி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு உதவுவதை நோக்கி தனக்கிருக்கக்கூடிய கணிசமான அரசியல் ஆற்றலைப் பயன்படுத்துவதே விவேகமான செயலாக இருக்கும்.
அவ்வாறு அவர் செய்வாரேயானால், தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் புதிய அரசியல் மற்றும் இராஜதந்திர மோதல் விரிவடைகின்ற நிலையில் இலங்கையை வாய்ப்பான ஒரு அந்தஸ்தில் வைக்கவும் உதவமுடியும்.” என கூறியுள்ளார்.