தமிழ் மக்கள் பேரவைக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிற்கிடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. “24 கரட்“ அரசியல் பேசும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பேரவைக்குள்ளிருந்து மற்றைய கட்சிகளை வெளியேற்ற கோரும் கடிதமொன்றை அனுப்பியதை தொடர்ந்து, மோதல் நிலைமை உச்சமடைந்துள்ளது.
வரும் 9ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகள் பேரவையிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்படலாம். அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேறலாமென தெரிகிறது.
பேரவைக்குள் மோதல் நிலைமை அவ்வளவு உச்சம்பெற்றுள்ளது.
மோதல் நிலைமையின் உச்சத்தை, இன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பிலிருந்து, பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான க.வி.விக்னேஸ்வரனிற்கு அனுப்பிய கடிதம் புலப்படுத்துகிறது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் கட்சிகளின் மீது வழக்கமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களை பேரவையிலிருந்து நீக்க வேண்டுமென குறிப்பிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அண்மையில் கடிதமொன்றை, க.வி.விக்னேஸ்வரனிற்கு அனுப்பியது. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் கட்சிகளிற்கு அனுப்பிய விக்னேஸ்வரன், 9ம் திகதி பேரவை கூட்டத்திற்கு முன்னதாக அதற்கான விளக்கத்தை தருமாறு கேட்டிருந்தார்.
இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் விளக்க கடிதம் இன்று விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பு பகிரங்கமாக மூச்சும் விடவில்லை. எனினும், கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பாக முதலமைச்சர் தரப்பின் மூத்த பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் சில விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
எட்டுப்பக்கங்களை கொண்ட அந்த கடிதத்தில், ஈ.பி.ஆர்.எல.எவ் தனது அடிப்படையான அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து விலகாததை சுட்டிக்காட்டியுள்ளது.
மாறாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேசும் “கறையில்லாத அரசியலும்“, அதன் நடைமுறையும் வேறுவேறாக இருப்பதை புட்டுப்புட்டு வைத்துள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் தேசிய கட்சிகளுடன் கூட்டு வைத்து விட்டதென குற்றம்சாட்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ் மாநகரசபை முதல்வர் பதவிக்காக ஈ.பி.டி.பியுடன் இரகசிய பேச்சு நடத்தியதென ஈ.பி.ஆர்.எல்.எவ் அந்த கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளது.
ஈ.பி.டி.பி பிரமுகர் ரெமீடியசுடன், முன்னணியின் முதல்வர் வேட்பாளர் மணிவண்ணன் நேரடியாக அந்த பேச்சில் ஈடுபட்டார் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த பிரமுகர் தகவல் தந்தார்.
அதேபோல, நெடுங்கேணி பிரதேசசபை தவிசாளர் தெரிவின்போது, அந்த சபை தென்னிலங்கை கட்சிகளிடம் விழலாம் என்ற ஊகம் இருந்தது.
தமிழர்களின் சபையொன்று தென்னிலங்கை கட்சிகளிடம் விழாமல் இருக்க, அந்த சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கவுள்ளதாக த.தே.ம.முன்னணி பகிரங்கமாக அறிவித்திருந்தது.
ஆனால், வாக்கெடுப்பின் போது, திடீரென நடுநிலையென அறிவித்தார்கள். தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், எதிர்தரப்பும் சமமான வாக்கை பெற்றிருந்தனர்.
பின்னர் திருவுளச்சீட்டின் மூலம்- அதிர்ஸ்டவசமாகவே- கூட்டமைப்பு தவிசாளர் பதவியை கைப்பற்றியது.
இந்த நடுநிலைமை, தென்னிலங்கை கட்சிகளை ஆட்சியிலமர்த்தும் நோக்கத்துடனானதா என அந்த கடிதத்தில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புளொட் தரப்பின் விளக்கம் நாளை அல்லது நாளை மறுநாள் விக்னேஸ்வரனிற்கு அனுப்பி வைக்கப்படலாமென தெரிகிறது