ஒரு திருமணமான பெண்ணின் உள்ளக் குமுறல்..
நான் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். என் வீட்டில் துரோகம் என்றால் என்ன? ஏமாற்றுதல் என்றால் என்ன? என்பதை பற்றி துளியும் அறியாமல் வளர்ந்தேன். ஆனால், எனது திருமண நாளில் இருந்து இன்று வரை நான் இந்த இரண்டை மட்டுமே ஒவ்வொரு தினமும் கடந்து வருகிறேன்.
எனக்கு திருமணமாகி 19 வருடங்கள் ஆகின்றன. பதின் வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். என் கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார். அவர் ஒரு கொடூர குணம் கொண்ட நபர். என்னையும், என் குழந்தைகளையும் டார்ச்சர் செய்வது தான் அவரது ஒரே பொழுதுபோக்கு. எண்ணற்ற வலிகளை கடந்தும் கூட, இதை தடுக்கவோ, இதில் இருந்து வெளிவரவோ எங்களுக்கு எந்தவழியும் இல்லை…
ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன் இந்திய கிராமங்களில் பெண் கல்வி என்பது பெரிய விழிப்புணர்வு இல்லாத காலம். அப்படியான சூழலில், எப்படியும் வயதுக்கு வந்தால் கட்டிக்கொடுக்க போறவளுக்கு எதுக்கு படித்து என தண்ணிதெளித்து விடப்பட்ட பல ஆயிரக்கணக்கான பெண்களில் நானும் ஒருத்தி.
வெளிநாட்டில் வேலை செய்கிறார், கைநிறைய சம்பாதிக்கிறார் என்று பொய்கூறி என்னை திருமணம் செய்து சென்றனர் என் கணவன் வீட்டார். ஆனால், உண்மையில் அவர் ஏழாவது கூட பாஸ் ஆகியிருக்கவில்லை.
அவர் துபாயில் ஒரு ஹோட்டலில் தான் வேலை செய்து வந்தார். என்ன செய்வது? இந்த உண்மை அறிவதற்குள் நான் கருவுற்றேன். படிப்பு இல்லை, வெளியே சென்றாலும் சமூகம் தவராக பேசும், இதற்கு நடுவே குழந்தை வேறு எனவே கட்டாயம் அவரது துணை வேண்டும் என்ற நிலை, நிர்பந்தம். ஏமாற்றப்பட்டிருந்தாலும் அவருடனேயே காலத்தை தள்ளினேன்.
திருமணத்தின் போது எனக்கு பதின் வயது. திருமணம் முடிந்த சில வருடம் அவர் என்னுடன் தான் இருந்தார், துபாய் செல்லவில்லை. அப்போது நான் எனது பதின் வயதுகளில் பயணித்து வந்தேன்.
முதல் குழந்தை பிறந்த இரண்டே வருடத்தில் இரண்டாம் குழந்தையும் பிறந்தது. இரண்டு குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் உடலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் ஏற்படுமோ அதுவனைதும் என் உடலிலும் ஏற்பட்டது. அதன் பிறகு தான் என் கணவர் எத்தகைய மிருகம் என்பதை அறிந்தேன்…
இரண்டாம் குழந்தை பிறந்த பிறகு என் உடலில் பல மாற்றங்கள், அது என் கணவருக்கு பிடிக்கவில்லை. அந்த மாற்றத்திற்கு ஒரு வகையில் அவரும் தான் காரணம் என்பதை அவர் மனம் ஏற்கவில்லை. அவருக்கு வடிவு சீர்குலைவற்ற பெண் உடல் வேண்டும் தனது இச்சை பசி தீர்த்துக் கொள்ள. இதை அவரே கூறி என்னை அதிர்ச்சிக்கு ஆளாகினார். அவரை கணவன் என்று அழைக்கவே நா கூசுகிறது.
வீட்டில் வளர்க்கும் நாய் கூட யார் கூப்பிட்டாலும் போகாது, புதியதாக ஒருவர் சோறு போட்டால் வாலாட்டிக் கொண்டு ஓடாது. ஆனால், இவர் நாயை விடவும் கேவலம். இவருக்கு பிச்சை எடுத்தாலும் ருசியான சோறு வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நபர்.
நான் ஒரு ஏமாளி, எனது வீட்டில் சீதனமாக கொடுக்கப்பட்ட பணம், நகை, பாத்திரங்கள் என் அனைத்தையும் விற்று செலவு செய்துவிட்டு மீண்டும் துபாய்க்கு வேலைக்கு போகிறேன் என்று கிளம்பினான். சரி உருப்படியான வேலை செய்ய போகிறார் என்று கருதினேன். பிறகு தான் தெரிந்தது. அங்கே தான் இவரால் சுதந்திரமாக இச்சை பசியை தீர்த்துக் கொள்ள முடியும் என்று.
அவருக்கு பெண் பித்தம் அதிகம். அதிலும் இளம் பெண்கள் மீது தான் ஆசை. வருடத்திற்கு ஒருமுறை தான் ஊருக்கு வருவார்.
இப்போதும் அவரது மொபைலில் இளம் பெண்களின் நிர்வாண படம் இருக்கும். விபச்சார விடுதிக்கு சென்று அங்கிருக்கும் பெண்களுடன் எடுத்துக் கொண்ட படங்களும் பலவன இருக்கும். அதை கண்டுபிடித்து இது என்ன என்று கோபத்துடன் கேள்வி கேட்டால்… நகைத்துக் கொண்டே எல்லாரும் அழகா இருக்காங்கல என்று நகர்ந்து செல்லும் மிருகம் அவர்.
இந்திய ரூபாய் மதிப்புள் ஒரு மாதத்திற்கு 10 – 15 ஆயிரம் ரூபாய் வரை விபச்சார விடுதிக்கு செல்ல மட்டுமே பயன்படுத்துகிறார்.
மாதாமாதம் எங்கள் வீட்டு செலவுக்கு என கொஞ்சம் பணம் வரும். அதை சேமித்தும், அருகே பக்கத்து ஊரில் சில வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை வைத்து கொண்டும் தான் வாழ்க்கை நடத்தி வருகிறேன்.
நான் பக்கத்து ஊருக்கு சென்று வீடு வேலை செய்வதற்கும் ஒரு காரணம் உண்டு. எங்கள் ஊரில் செய்தால், புருஷன் துபாயில இருந்து சம்பாதிச்சு கொட்டுறான்… இவ என்ன வீட்டு வேலைக்கு போறா என்று ஏளனமாக பேசுவார்கள்.
மேலும், இவரது இந்த இச்சை குணம் குறித்து அவரது தங்கையை தவிர வேறு யாருக்கும் தெரியாது. வந்திருவான்… கொஞ்ச வருஷம் தானே…
அவன் வேண்டிய அளவு சம்பாதிச்சுட்டு ஊருக்கே மொத்தமாக திரும்ப வந்திருவான் என கணவர் குடும்பம் முழுக்க எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர் ஊருக்கே திரும்பி வந்துவிட்டால் அது எத்தகைய கொடுமையான விஷயம் என்பதை நானும், எனது மகன்களும் மட்டுமே அறிவோம்.
சில இரவுகளில் அவரது போக்கு, இந்த கொடுமையான வாழ்க்கை எல்லாம் எண்ணி பார்த்தால் தற்கொலை செய்துக் கொண்டு இறந்துவிடலாம் என்று தோன்றும். ஆனால், எந்த பாவமும் அறியாத என் மகன்களின் வாழ்க்கைக்காக தான் உயிரை தினமும் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். யாரிடம் போய் சொல்வது…
என் ஊர் மக்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர் என்று யாரிடமும் இதுக் குறித்து பேச முடியாது. என் அப்பா, அம்மாவும் இறந்துவிட்டனர். எனக்கு தோழிகள் என்று யாரும் பெரிதாக இல்லை. சோகத்தை பகிர்ந்துக் கொள்ள கூட ஆட்கள் இல்லை என்பது தான் பெரிய சோகமே.