பிரித்தானிய வீதியொன்றில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்திய தாயொருவர் திடீரென மயங்கிச் சரிய, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது மகன் தனது சமயோகித புத்தியால் தன் தாய் உயிரைக் காத்ததோடு தன்னையும் காத்துக்கொண்டார்.
பிரித்தானியாவின் Essex இல் உள்ள பெருந்தெரு ஒன்றில் வேகமாக காரைச் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் Lauren Smith (27) என்ற பெண் திடீரென மயங்கி காருக்குள்ளேயே சரிந்துள்ளார்.
கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவில் நிறுத்தப்பட்டிருந்த தடுப்புகளின் மீது மோதிக் கொண்டே செல்ல, சட்டென்று காரின் சுக்கானை பிடித்து காரை வீதியின் நடுவிலிருந்து கவனமாக வெளியே கொண்டு வந்து புற்தரை ஒன்றில் நிறுத்தியிருக்கிறான் எட்டே வயதான அவரது மகன் Ben Hedger.
கார் கட்டுப்பாட்டை இழந்து செல்வதைக் கவனித்த பிற வாகன ஓட்டிகள், உதவிக்கு ஓடி வந்தபோது அவசர உதவிக்காக அழைப்பை ஏற்படுத்த முயன்று கொண்டிருந்த சிறுவனைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட Laurenக்கு வைரஸ் தொற்றினால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தன் உயிரைக் காத்ததற்காக மகனுக்கு நன்றி கூறியுள்ளார். தனது மகன் செய்தது எவ்வளவு பெரிய செயல் என்று உணர்த்துவதற்காகவே மகன் செய்த காரியத்தை சொல்லி பாராட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறும் Lauren, “என் மகன் ஒரு குட்டி ஹீரோ” என்று கூறி அவரை அணைத்துக்கொள்கிறார்.
தனது சமயோகித புத்தியால் காரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரும்போது, எச்சரிக்கை விளக்குகளையும் எரியவிட்டபடியே Ben வாகனத்தை நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.