தமிழரசுக்கட்சியில் கனடா கிளையின் பிடி எவ்வளவு இறுக்கமானது என்பது ஊரறிந்த இரகசியம். நிதி அன்பளிப்பு என்று தொடங்கி, கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் யாரை நியமிப்பது என்பது வரை வந்து நிற்கிறது. வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தொடங்கி, யாழ் மாநகரசபை முதல்வராக ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டது வரை எல்லாமே கனேடிய டொலர்தான்.
டொலர்களை வீசிக்கொண்டு திடீரென வெளிநாட்டிலிருந்து ஆட்கள் நுழைந்து கட்சியை கட்டுப்படுத்தினால், ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் செயற்பாட்டாளர்கள் அதிருப்தியடைவார்கள் என்பது யதார்த்தமானது. தமிழரக்கட்சிக்குள்ளும் அதுதான் நடந்தது.
கனடிய டொலர் விவகாரத்தை முதன்முதலில் வெளிப்படுத்தியது தீவகம் தான். அப்போது தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் நம்முடன் முறைத்துக் கொண்டார்கள். பலர் இரகசியமாக தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். இப்பொழுது அதை விட்டு விடுவோம்.
உள்ளூராட்சி தேர்தலில் கொஞ்சம் சறுக்க, உடனே தமிழரசுக்கட்சி ஒரு குழுவொன்றை நியமித்தது. ஏன் இந்த சறுக்கல் என்பதை ஆராய்ந்து அறிக்கையளிப்பதே குழுவின் வேலை. அப்போது குழுவின் முன்பாக தோன்றிய பிரமுகர்கள் சிலர் கனடிய தலையீட்டை பற்றியும் பேசியிருந்தனர். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சறுக்கலை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரே, கனடாவிலிருந்து வந்திருந்த குகதாசன்தான்!
இப்போது திருகோணமலை மாவட்ட தலைவராக குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பொழுது எதற்காக கனடிய தலையீட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறீர்களா?. விசயம் உள்ளது.
குகதாசனை தமிழரசுக்கட்சியின் வடக்கு விவகாரங்களை கவனிக்கும் முக்கிய பொறுப்பொன்றில் நியமிக்க முஸ்தீபுகள் நடந்து வருகிறதாம். கட்சியின் உயர்மட்டத்துடன் தொடர்புடைய விவகாரம் இது. உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு கொண்டிருக்கும் விடயம். தமிழரசுக்கட்சி தலைவர், கூட்டமைப்பின் பேச்சாளர் தவிர்த்து, வடக்கில் ஐந்து தமிழரசுக்கட்சி எம்.பிக்கள் உள்ளனர். மூத்த உறுப்பினர்கள் பலருள்ளனர். திடீரென, இப்படியொரு நியமன முயற்சி நடந்தால், அவர்களிற்கு கோபம் பற்றியெரியும்தானே.