அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பாவும் – அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். அப்பாவுக்கு அலுவலகத்திலேயே இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருந்தது தான் சண்டைக்கு காரணம் என்பது அவளுக்கு பள்ளிப் பருவத்தில்தான் புரிந்தது.
ஒருவழியாக அவள் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தபோது குடும்பத்தில் அசம்பாவிதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தன. அவளது தாயார் விபத்து ஒன்றில் சிக்கி படுத்தபடுக்கையானார். ஏகப்பட்ட பணச்செலவு. இனி எழுந்திருக்க வாய்ப்பில்லை.
அவரது கடைசி காலம் வரை தொடர்ந்து சிகிச்சை செய்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. அந்த நெருக்கடியான சூழலில் திடீரென்று ஒருநாள் அவளது தந்தை, வீட்டிற்கு வருவதை நிறுத்திவிட்டார்.
அவள், அலுவலகத்திற்கு தந்தையை தேடிச்சென்றபோது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவரும், உடன் வேலை பார்த்த பெண்ணும் வேலையில் இருந்து விலகி, வேறு எங்கோ போய்விட்டார்கள். அம்மாவும், அவளும் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
தாயின் சிகிச்சைக்கும், தனது கல்விக்கும் தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது என்று அவள் மனம் குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்த நேரத்தில், கல்லூரி தோழி ஒருத்தி அவளை அழைத்துக் கொண்டுபோய், அந்த நடுத்தர வயது தொழிலதிபர் முன்னால் நிறுத்தினாள்.
அவர் தேவையான அளவு பணத்தை உடனே கொடுத்தார். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பணம் கொடுத்தும் உதவினார். ஆறு மாதங்கள் கடந்த நிலையில் பணத்தின் பின்னால் இருந்த அவரது கோரிக்கை என்ன என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மாற்றுவழி எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியாததால், அவரது ஆசைக்கு உடன்பட்டுவிட்டாள். வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
அடுத்த சில வருடங்களில் அவளது படிப்பு முடிந்தது. படிப்பு முடியும் முன்பே தாயார் இறந்துவிட்டார். வெளியே ஏதாவது வேலைக்கு சென்றுவிட்டால் அவரது பிடியில் இருந்து விலகி விடலாம் என்று தீர்மானித்தாள். ஆனால் அவரோ, திருமணமாகும் வரை என்னிடமே வேலை பார். நானே திருமணம் செய்து வைக்கிறேன். திருமணமான பின்பு நான் எந்த வகையிலும் உன்னோடு தொடர்பில் இருக்க மாட்டேன் என்றார்.
திருமணம்தான் தனக்கு விடுதலை தரும் என்பது அவளுக்கு புரிந்தது. அவரே மாப்பிள்ளை தேடினார். சாதாரண குடும்பத்து இளைஞனை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தால் போதும் என்று அவள் சொன்னாள்.
அவரோ தனது தகுதியை முன்னிருத்தி நடுத்தர வசதி கொண்ட குடும்பத்தில் அவளுக்கு மாப்பிள்ளை தேடி, திருமணத்தையும் நடத்தி வைத்தார். நிம்மதி பெருமூச்சுவிட்டபடி அவள் அவரிடமிருந்து விடுபட்டு, கணவரோடு வாழச் சென்றாள்.
இதோ பத்து வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது அவளுக்கு 34 வயது. 2 குழந்தைகளின் தாய். தனது கணவர் சிறிய அளவில் நடத்திய தொழிலை, தனது கடும் உழைப்பு மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் வளர்ச்சியடைய வைத்துவிட்டாள்.
பெயர் சொன்னால் சாதாரண மக்களும் தெரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களது தொழில் வளர்ந்துவிட்டது. புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் அளவுக்கு அவளும் தனது திறமையை வெளிப்படுத்தி, தனிப்பட்ட முறையிலும் வளர்ந்து விட்டாள்.
இந்த பத்தாண்டு கால இடைவெளியில், அவளுக்கு அடைக்கலம் கொடுத்த அந்த தொழிலதிபர் வாழ்க்கையில் பரிதாபமாக தோற்றுப்போனார். மனைவி பிரிந்து போனார். பிள்ளைகளும் அவரை புறக்கணித்துவிட்டார்கள். தொழிலை அவரால் லாபகரமாக நடத்தமுடியவில்லை. நொடிந்துபோனார். தவறான முடிவுகளால் கடனிலும் சிக்கிக்கொண்டார்.
கடனிலும், முதுமையின் பிடியிலும் சிக்கியிருக்கும் அவர், இவளிடம் வந்து பழசை எல்லாம் மறந்துவிடு. இனி, உன் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் நான் தொந்தரவு தர மாட்டேன். ஆனால் நான் நிர்கதியாக நிற்கிறேன். எனக்கு ஏதாவது ஒருவகையில் பண உதவி மட்டும் செய் என்று கையேந்துகிறார். பிரச்சினைக்குரிய விதத்தில் உதவியை பெற்றுவிட்டோமே என்று கண் கலங்கி, அவருக்கு உதவவும் முடியாமல் – உதறவும் முடியாமல் தவித்து நிற்கிறாள் அந்த பெண்.