சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள, பிரித்தானியாவின், மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் அகமட் பிரபு , அங்கு மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி என்பன பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், மனித உரிமை கரிசனையுள்ள 30 நாடுகள் தொடர்பான, 2018இல் மனித உரிமைகள் நிலைமைகள் என்ற இடைக்கால அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
”சிறிலங்காவின் நிலைமைகளை பிரித்தானியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது மனித உரிமைகள் பாதுகாவலர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பலரது கரிசனையையும் நாங்கள் அறிவோம்.
மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி என்பன பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பாக, நாங்கள் எல்லா தரப்புகளுடனும் பேசியுள்ளோம்.
அதனை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் சிவில் சமூக பிரதிநிதிகளுடனும், அனைத்துலக பங்காளர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறோம்.
தேவைப்பட்டால், சூழ்நிலைக்கேற்ப பதிலளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.