டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்.நகரப் பகுதியைச் சேர்ந்த பிரபல கல்லூரியொன்றின் மாணவி பாடசாலைக்குத் தினமும் அம்புலன்சில் வந்து க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதி விட்டுச் செல்லும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவி டெங்கு நோய் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த மாணவி இவ்வருடம் இடம்பெறுகின்ற க. பொ. த சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் பரீட்சை எழுதுவதற்கு வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மாணவியின் கோரிக்கையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகம் சாதகமாகப் பரிசீலித்த நிலையில் குறித்த மனைவி தினம் தோறும் பரீட்சை மண்டபத்திற்கு அம்புலன்சில் அழைத்து வரப்படுகின்றார். பரீட்சை நிறைவடைந்த பின்னர் அவர் மீளவும் அம்புலன்சில் வைத்தியசாலை அழைத்துச் செல்லப்படுகின்றார்.
இதேவேளை,மேற்படி மாணவியின் தன்னம்பிக்கையை வைத்தியர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளதுடன் மாணவியின் விருப்பம் நிறைவேற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ள யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைச் சமூகத்தினரை கல்வியலாளர்கள் பலரும் வெகுவாகப் பாராட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.