செவ்வாய்க் கிரகத்தில் முதன் முதலாக ஒலியை கேட்க முடிந்துள்ளதாகவும் இன்சைட் விண்கலம் அதனைப் பதிவு செய்து அனுப்பியுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட இன்சைட் விண்கலம் கடந்த நவம்பர்- 26 ஆம் திகதி வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தை அடைந்தது. மேற்படி விண்கலம் அங்கு தனது பணிகளைத் தொடங்கியது.
குறித்த விண்கலம் சில புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியதாக நாசா தெரிவித்து அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக செவ்வாய்க் கிரகத்தில் ஒரு சத்தத்தைக் கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாசா மேலும் தெரிவித்துள்ளதாவது,
முதன் முதலாக செவ்வாய்க் கிரகத்தின் ஒலியைக் கேட்டிருக்கிறோம். இன்சைட் விண்கலம் அந்த சத்தத்தைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது.
அந்தச் சத்தம் உரக்கக் கேட்கக்கூடியதாக இல்லை. காற்றின் அதிர்வலைகளே ஒலியாக பதிவாகியுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தில் வடமேற்கிலிருந்து தென்கிழக்கை நோக்கி மணிக்கு 10 முதல் 25 மைல் வேகத்தில் குறித்த அதிர்வலை பதிவாகியுள்ளது. எனவும் நாசா மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற சின்ன சின்ன சத்தங்கள் கூட கோள்களை ஆராய்ச்சியில் செய்வதற்கு மிகவும் உதவியாகவிருக்கும். இன்சைட் அனுப்பியது போன்ற ஒலியை எதிர்பார்க்கவே இல்லை என நாசா விஞ்ஞானி புரூஷ் பெனர்ட் வியந்து கருத்துக் கூறியுள்ளார்.
இதேவேளை,இன்சைட் அனுப்பிய சத்தத்தை நாசா அனைவரும் கேட்கும் விதமாக யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. மிகவும் லேசாக ஒலிக்கும் அந்தச் சத்தத்தை ஹெட்போனிலோ, ஸ்பீக்கர்கள் மூலமோ தான் கேட்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.