கிட்டுவின் ஆளுமை – ராஜதந்திரம் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் கைதிகள் பரிமாற்றம் பற்றிச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. அந்தக் கோலத்துக்குக்கான ஆரம்ப புள்ளியை வைத்தவர் ரவி எனப்படும் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையின் ஆசிரியர் ஆவார். வெலிக்கடைச் சிறையில் அக்காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவரும் வவுனியா மாவட்டத்தில் புலிகளின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக விளங்கிய தவம் அண்ணாவும் அங்குள்ள வைத்தியசாலைக்கு மருந்து எடுக்கச் சென்றனர். அங்கு அவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. வீரச்சாவடைந்து விட்டார் எனக் கருத்தப்பட்ட அருணா அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தார். மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக விளங்கியவரே அருணா. தமிழகத்திலிருந்து படகு மூலம் நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது கடற்படையினர் இந்தப் படகை மூழ்கடித்தனர். இச்சம்பவம் 1986 ஏப்ரல் 27 நாள் நடைபெற்றது.
இச் சம்பவத்தில் கப்டன் அலெக்ஸ் (கந்தசாமி நித்தியானந்தன் – நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்), லெப். கபில் (இரா. பாலேந்திரன் திருகோணமலை), 2ம் லெப். ரங்கா (சிங்காரவடிவேல் இராசகுமார் ஊரிக்காடு, வல்வெட்டித்துறை) 2ம் லெப். துரைக்குட்டி (சிவகுருநாதன் இராசவடிவேல் – வல்வெட்டித்துறை), வீரவேங்கை நளினன் (சச்சிதானந்தன் பிரதாபன் – நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்), வீரவேங்கை கார்த்திக் (நடராஜா கார்த்திகேசு – யாழ்ப்பாணம்), வீரவேங்கை தெய்வா (ஐயாத்துரை சிவநாதன் – மாதகல், யாழ்ப்பாணம்), வீரவேங்கை காந்தன் (சிவசுந்தரம் விஜயதாஸ் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்), வீரவேங்கை யேசு ( பத்மநாதபிள்ளை ரவீந்திரா – முனிவைரவர் கோவிலடி, அளவெட்டி, யாழ்ப்பாணம்), வீரவேங்கை அருச்சுனா (பொன்னுத்துரை மித்திரா சின்னஉப்போடை, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவெய்தினர்.
நன்கு நீச்சல் தெரிந்ததால் அருணா கடலில் நீந்தினார். முதலில் அருணாவுக்கு நீச்சல் தெரியாது மட்டக்களப்புக்கு போவதற்கு முன்னர்தான் நீச்சல் பயின்றார். இதன் பின்னர் கடலில் நீண்ட நேரம் நீச்சலடிக்காது மிதக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். மூதூர் பிரதேசத்தில் இலக்கந்தை கடலில் போராளிகளோடு குளிக்கும் போது இவ்வாறு மிதந்து காட்டினார்.
படகு மூழ்கும் போது அருணா தான் மட்டுமே உயிர் தப்பியதை உணர்ந்து கொண்டார். கடற்படையினர் கயிறு எறிந்து அவரைக் காப்பாற்றினர். பின்னர் விசாரணையின்போது தனது பெயர் கோணேசன் என்பதற்குப் பதிலாக செல்வகுமார் என்றும் தான் ஒரு படகோட்டி என்றும் கூறினார். வேறு எவராவது தப்பியிருந்தால் தனித்தனியாக்கி விசாரிக்கும்போது வெவ்வேறு விபரங்களைக் கூறி சிக்கலுக்குள்ளாக்கியிருக்கக் கூடும். சிறையில் சிங்கள இனத்தைச் சேர்ந்த நிசாம் எனும் போராளியைச் சந்திக்க நேர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் போல் நடந்துகொண்டனர். நிசாம் கொழும்பில் கைதாகியிருந்தார்.
1985 ஜனவரி 09 அன்று நடந்த அச்சுவேலி முற்றுகைக்கு நிசாம்தான் காரணம் எனப் பரவலாக நம்பப்பட்டு வந்தது. கிளிநொச்சியில் இளைஞர்களைக் விசாரித்த படையதிகாரி ஒருவர் எல்.ரீ.ரீ.ஈயைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் ஏனெனில் நான் தான் நிசாம் என்று கூறிக்கொண்டு இருந்தார். நிசாமை எவருக்கும் நேரில் தெரியாதுதானே. நிசாம் படையினரின் ஊடுருவல் என நம்பப்பட்டது. சைகையினால் அருணாவும் நிசாமும் ஒருவரைப் பற்றி ஒருவர் சொல்வதில்லை என முடிவெடுத்துக் கொண்டனர்.
நிசாமைப் போலவேதான் இறுதி யுத்தத்தில் படையினரின் உளவாளி எனச் சிலரைப் பற்றி தங்கள் தங்கள் அறிவுக்கேற்ற மாதிரி பலர் கதைகளைப் பரப்பினர்.(புலம்பெயர் தேசத்தவரும் இவ்வாறு தமக்குப் பிடிக்காதவர்களை கே.பியின் ஆள், றோவின் ஆள், கோத்தபாயவின் ஆள் என சகட்டுமேனிக்குக் குற்றம் சாட்டுகின்றனர். படையினரிடம் சரணடைந்தவர்கள் என்றாலே பொதுவாக இந்தப் பட்டம்தான். பட்டம் வழங்குவது யார் என்றால் ஏற்கனவே இந்தியப் படையினரிடமோ, இலங்கைப் படையினரிடமோ பிடிபட்டவர்கள் மற்றும் வாழ்க்கையில் களம் காணாதவர்கள் அத்துடன் கூலிக்கு எழுதுபவர்கள்)
ரவியிடமும் தவம் அண்ணாவிடவும் செல்வகுமார்தான் தனது பெயர் என்று சொல்லியிருக்கிறேன் என்றும் நிசாம் ஒரு அப்பாவி எனவும் விசுவாசத்தில் யாருக்கும் குறைந்தவன் அல்ல என்றும் அருணா கூறினார். அடுத்த ஒருசில நாட்களில் தன்னைப் பார்வையிட வந்த உறவினர் ஒருவரிடம் ரவி தனது மாமாவின் லொறி பற்றி நினைவூட்டினார். அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர் உள்ள ஆள் இங்குதான் இருக்கிறார் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கூறும் படி சொன்னார். அந்த லொறியின் பெயர் ‘அருணா ட்ரான்ஸ்போர்ட்’ அந்தப் பார்வையாளர் உடனடியாக யாழ்ப்பாணம் போய் கிட்டுவிடம் விசயத்தைச் சொன்னார்.
அன்று பகல் ஏற்கனவே மட்டக்களப்பில் நின்ற ஒரு போராளி அருணாவின் புகைப்படம் பொறித்த துண்டுப் பிரசுரங்களைத் தபால் மூலம் மட்டக்களப்புக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை கிட்டு கண்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த அம்பாறையைச் சேர்ந்த ஒரு மாணவன் மறுமலர்ச்சிக் கழகத்தின் துணையுடன் இதனை வெளியிட்டார். (மறுமலர்ச்சிக் கழகத்தின் விளம்பரப் பலகையிலும் இது ஒட்டப்பட்டிருந்தது) உடனே கிட்டு அந்தப் போராளியை அழைத்து அருணா உயிருடன் இருக்கும் விடயத்தைச் சொன்னார். ‘அருணாவின் புகைப்படம் வெளிவரக்கூடாது. நீ அனுப்பிய கடிதங்கள் மட்டக்களப்புக்கு போகக்கூடாது எதையாவது செய்’ என்றார். எப்படியோ யாழ்ப்பாணத்திலிருந்து தபால் கட்டுக்களில் அவை போகாத மாதிரி மீளப்பெறப்பட்டன.
சில நாட்களின் பின்னர் எதோ ஒரு வகையில் தொடர்பு கிடைத்து செல்வகுமார் என்ற பெயரில் உள்ள கைதியைப் பார்க்கவென வெலிக்கடைக்குச் சென்றார் பொன். வேணுதாஸ் என்ற சட்டத்தரணி. (அன்னை பூபதியின் உண்ணா விரத நிகழ்வுகளைக் ஒழுங்கு படுத்திய இவர் பின்னர் சிறைக்குப் போக வேண்டி ஏற்பட்டது. தொடர்ந்து இயக்க உறுப்பினர் என்ற நிலைக்கும் செல்ல காலம் பணித்தது. 11.12.1991 அன்று படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மேஜர் வேணுவாக வீரச்சாவெய்தினார்) அருணாவின் விடயமாக ஒரு முக்கிய உறுப்பினர் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றார்.
12.10.1986. அன்று அடம்பனில் படையினர் மேற்கொண்ட முற்றுகையைத் தளபதி விக்ரர் தலைமையில் பானு மற்றும் பெண் போராளிகள் அணி எதிர்கொண்டனர். இதில் லெப்.கேணல் விக்ரரும் 2 ஆம் லெப். ரோமும் வீரச்சாவெய்தினர். மகளிர் படையணியை முதலில் களமிறங்கியது விக்ரரே. இந்தக் களம் அடம்பன் என தவறுதலாகக் குறிப்பிடப்படுகிறது. மன்னார் தீவுப்பகுதியை சில நாட்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக நடத்திய சமரிலேயே மகளிர் படை முதன் முதலாக களமிறங்கியது. சண்டை அனுபவம் ஒன்று தேவை என்பதற்காக மன்னார் நகரத்துக்குள் மகளிரை அனுப்பினார் விக்ரர். அந்த அனுபவம் அடம்பன் முற்றுகைக்குக் கைகொடுத்தது. பல படையினர் கொல்லப்பட்டனர். சில படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இரு படையினர் உயிருடன் பிடிப்பட்டனர். கைப்பற்றப்பட்ட படையினரின் சடலங்களை யாழ். கோட்டை முகாம் வாசல் வரை கொண்டு சென்று கையளித்தார் ரஹீம் என்ற போராளி.
தொடர்ந்து ஸ்ரீலங்கா மக்கள் கட்சித் தலைவர் விஜய குமாரதுங்காவுடன் தொடர்பை ஏற்படுத்தி படையினர் இருவரையும் கையளிப்பதாயின் அரசின் வசம் கைதிகளாக உள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவரை விடுவிக்க வேண்டுமென கிட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விஜய குமாரதுங்கவும் அவரது மனைவி சந்திரிகாவும் தற்செயலாக புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை முன்னர் சந்தித்திருந்தனர். எனவே இந்த விடயத்தைக் கையாள விஜய குமாரதுங்கா விரும்பினார். அரசு தரப்புடன் அவர் பேச்சுக்களை மேற்கொண்டார். யாழ்.கோட்டை முகாம் கப்டன் கொத்தலாவல இம்முயற்சியில் தீவிர அக்கறை காட்டினார்.
படையினர் – புலிகள் சந்திப்பென்றாலும் இரு பகுதியினரும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபித்தனர். விஜய குமாரதுங்கவுடன் வந்த படப்பிடிப்பாளர் ஒருவரை இவர் புலனாய்வு அதிகாரி என இனங்கண்டு அவரது பெயரையும் குறிப்பிட்டனர் புலிகள். அவரை அங்கேயே நிற்க விட்டு ஏனையோரை அழைத்துச் சென்றனர். கப்டன் கொத்தலாவல முக்கிய புலி உறுப்பினர்களை யாரும் அவருக்கு அறிமுகப்படுத்த முன்னரே ‘ஆ… ரவி, ஆ… கேடி’ என விசாரித்துக் கைகுலுக்கினார்.
பேச்சுகளின்போது விடுவிக்கப்பட வேண்டிய தமது உறுப்பினர்களின் பெயர்களில் காமினி என்பவரை முதலாவதாகக் குறிப்பிட்டனர் புலிகள். அடுத்தவர் செல்வகுமார் என்றனர். என்ன முக்கியத்துவம் இவர்களுக்கு என கொத்தலாவல அறிய முயன்றார் ‘காமினி ஒரு சிங்களவராக இருந்து கொண்டு எமது போராட்டத்தில் இணைந்தவர். செல்வகுமார் ஒரு படகோட்டி. எமது நடவடிக்கைகளுக்கு படகோட்டிகளின் பங்கு முக்கியமானது. தங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என அவர்கள் உணர வேண்டும். அதற்காகவே செல்வகுமார் விடுவிக்கப்படவேண்டும்’ எனக் குறிப்பிட்டார் கிட்டு. எவ்வாறாகினும் எமக்கு காமினியின் விடுதலை முக்கியம் என அடிக்கடி வலியுறுத்தினார். இதன் மூலம் செல்வகுமார் பக்கம் (அருணா) மீது அவர்களின் கவனம் திரும்பாமல் பார்த்துக்கொண்டார்.
படையினர் இருவரது பெற்றோரிடமும் நாங்கள் நிச்சயமாக இவர்களைக் கொல்லமாட்டோம் என வாக்குறுதியளித்தார். உலகத்துக்கு (குறிப்பாக சிங்கள மக்களுக்கு) விடுத்தசெய்தியில் ‘இந்த அரசு தனது படையினர் குறித்து எந்தளவு அக்கறையுடன் உள்ளது என்பதைச் சிங்கள மக்கள் புரிவதற்கு இது ஒரு சந்தர்ப்பம்’ என்றார். இந்தச் செய்தி சிங்கள மக்கள் மத்தியில் பரவியது. அரசுக்கு அழுத்தங்கள் கூடின. இரு நாடுகளுக்கு இடையில்தான் போர்க் கைதிகள் பரிமாற்றம் நடைபெற முடியும் என விடாப் பிடியாக நின்ற அரசு தனது நிலைப்பாட்டை மாற்ற நேர்ந்தது.
இறுதியில் பலாலி முகாமிலிருந்து காமினியும், அருணாவும் விடுவிக்கப்பட்டனர். யாழ். கோட்டை முகாமுக்கு இரு படையினரையும் அனுப்பிவைத்தனர் புலிகள். அன்று செய்தியாளருக்கு கருத்துத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ‘விடுவிக்கப்பட்ட புலிகள் முக்கியமானவர்களல்ல. குறிப்பாக காமினி மிக விரைவில் விடுதலையாக விருந்தார் (தண்டனைக்காலம் முடிந்து), அடுத்தவர் குமார், அவர் ஒரு படகோட்டி’ எனக் குறிப்பிட்டார்.
‘இந்தக் கைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் உள்ளன என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.’ எனக் குறிப்பிட்டார் கிட்டு
அருணா விடுதலையான செய்தி காட்டுத் தீ போல் பரவியது. யாழ். பல்கலைக்கழக மறுமலர்ச்சிகழக விளம்பர பலகையில் அருணாவுக்கு அஞ்சலி செலுத்தி ஒட்டப்பட்டிருந்த துண்டுப் பிரசுரத்தின் தலைப்பில் ‘மீண்டும் எம்மிடம் எப்போ…?’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு கீழ் அருணா விடுதலையான நாளை எழுதி விட்டிருந்தார் ஒரு குறும்பர்.
அடுத்த நாள் கிட்டுவுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கப்டன் கொத்தலாவல ‘அருணா சுகமாக இருக்கிறாரா?’ எனக் கேட்டார். சிரித்துக்கொண்டே மழுப்பினார் கிட்டு. இந்தக் கைதிகள் பரிமாற்றம் என்பது கிட்டுவின் ராஜதந்திரம், ஆளுமையை உலகுக்கு வெளிக்காட்டியது. புலிகள் இயக்கத்தின் கட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறலாம். பேரத்துக்கு உட்படுபவர் அருணாதான் என்ற விடயம் மிக மிக இரகசியமாக இருந்தது.
இன்று கைதிகள் பரிமாற்றத்தில் வெளிவந்த அருணாவோ, காமினியோ, படைத்தரப்பின் அஜித்தோ உயிரோடு இல்லை. அருணாவின் இழப்பு யாழ். குருநகரில் இடம்பெற்றது. காமினி 4.5.1987 அன்று வந்தாறுமூலை மட்டக்களப்பில் நடைபெற்ற நேரடி மோதலில் வீரச்சாவு. அஜீத் வெலிக்கந்தைப் பகுதியில் இராணுவ அணிக்கு தலைமை தாங்கிச் சென்ற போது 27.10.1991 அன்று புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருக்கு மேஜர் நிலையை வழங்கியது அரசு.
இவர் புலிகளின் தடுப்பிலிருந்த போது இவரது பிறந்த நாளில் கிட்டு தங்கச்சங்கிலியொன்றை பரிசாக வழங்கினார். விடுதலையான பின் படையினரால் கைதுசெய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரை தான் பராமரிக்கப் வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளியிட்டார் . அவரது வாழ் நாளில் அது கை கூடாமலே போயிற்று .
மற்றப் படையினர் பற்றிய விவரம் தெரியவில்லை.
இந் நடவடிக்கையை நெறிப்படுத்திய கேணல் கிட்டு மற்றும் கப்டன் கொத்தலாவல, விஜய குமாரதுங்க, லலித் அத்துலத் முதலி ஆகியோரும் இன்று உயிருடன் இல்லை
அண்மையில் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வில், வீரமரணத்தை தழுவிய புலிகளின் தளபதிகளின் படங்களை அஞ்சலிக்கு வைக்க முயன்ற முன்னாள் போராளிகளை, அங்குள்ள தமிழ் அமைப்பொன்று அவமதித்திருந்தது. போலி இணையத்தளங்களின் மூலம் அவர்கள் தொடர்பான அவதூறுகளை பரப்பியது.
குறிப்பாக, விடுதலைப்புலிகள் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராக இருந்த ரவி தொடர்பில் அவதூறுகளை பரப்பினார்கள். ரவி, கே.பியின் ஆள் என தகவல் பரப்பப்பட்டது.
அது தவிர, இசைப்பிரியாவின் படத்தை அஞ்சலிக்கு வைக்க மறுத்து, அவர் போராளி அல்ல, அவருக்கு அஞ்சலி செலுத்தினால், ஐ.நாவில் அவரை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய முடியாது, இராணுவம் அவரை கொன்றது சரியென ஆகிவிடும் என்றும் காரணம் சொன்னார்கள்.
அதேபோல, உயிர்நீத்த ஏனைய பல தளபதிகளின் படங்களையும் அஞ்சலிக்கு வைக்க அனுமதி மறுத்தனர். உயிரிழந்த அனைத்து போராளிகளிற்கும் அஞ்சலி செலுத்த முயன்ற மூத்த போராளி ரவி மீது பரப்ப்பட்ட அவதூறுகளிற்கு பதிலாக, போராட்ட வரலாற்றில் ரவியின் பாத்திரத்தை புரிய வைக்க, ஒரு சிறு நினைவை அரவிந்த் குணா பகிர்ந்துள்ளார்.